கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைய உள்ள நிலையில் நெல்லை, குமரி, தூத்துக்குடியில் அணு பேரிடர் மருத்துவமனை?

நெல்லை: கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கப்பட உள்ள நிலையில் விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கையாக நெல்லை, குமரி, தூத்துக்குடியில் அணு பேரிடர் மேலாண்மை மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக மத்திய குழு ெநல்லையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய ஒத்துழைப்புடன் அணுமின் நிலையம் செயல்படுகிறது. ஏற்கனவே 2 அணு உலைகள் இயங்கி வரும் நிலையில் மேலும் 2 அணு உலைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே கூடங்குளத்தில் அணு கழிவு மையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு உள்ள நிலையில் இதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அணு உலை அல்லது அணுக்கழிவு மையங்கள் உள்ள பகுதிகளில் நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை சீற்றம் மற்றும் விபத்துக்கள் அல்லது வேறு காரணங்களுக்காக அணு மின்நிலையப் பகுதியில் ஏதாவது இடையூறு அல்லது விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உடனடி சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

 இதற்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு நேற்று மத்திய சுகாதாரத்துறையின் சார்பில் எமர்ஜென்சி மேனேஜ்மென்ட் நிபுணர்கள் 4 பேர் வந்தனர். அணு பாதிப்பு தொடர்பான அவசர கால சிகிச்சை அளிப்பதற்காக உள்ள வசதிகள் மேலும் தனியாக சிறப்பு அணு உலை பாதிப்பு மருத்துவமனை சுமார் 6 ஆயிரம் சதுர அடியில் அமைப்பதற்கான தனிமையான பாதுகாப்பான இட வசதி. அதற்கான போக்குவரத்து வசதி போன்றவைகள் குறித்து அவர்கள் ஆய்வு செய்ததாக தெரிகிறது. புதியதாக கட்டப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் அதனை சுற்றியுள்ள வளாகப் பகுதிகளையும் மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டுகளையும் அவர்கள் ஆய்வு செய்துள்ளனர். இவர்கள் தரும் அறிக்கைக்கு ஏற்ப தொடர்ந்து பிற குழுவினர் ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பார்கள் எனத்தெரிகிறது. இக்குழுவினர் தூத்துக்குடி, கன்னியாகுமரி மருத்துவமனை வளாகப் பகுதிகளையும் ஆய்வு செய்வர்.

Related Stories: