நாளை மக்களவை சபாநாயகர் தேர்தல்: எம்.பி.ஓம் பிர்லாவுக்கு ஆதரவு தெரிவிக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி தீர்மானம்

டெல்லி: மக்களவை சபாநாயகராக பொறுப்பேற்க உள்ள பா.ஜ.க.வை சேர்ந்த ஓம் பிர்லாவுக்கு, காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தனது ஆதரவை தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றிபெற்று, மத்தியில் தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி அமைத்தது. அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை ஜூன் 17ம் தேதி கூட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாடாளுமன்றத்தின் (17வது மக்களவை) முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. அப்போது தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட வீரேந்திர குமாருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராஷ்டிரபதி பவனில் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அத்துடன் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி உள்ளிட்டோர் என மொத்தம் 313 எம்பிக்கள் பதவியேற்றுக்கொண்டனர். நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் எம்பிக்கள் ஒவ்வொருவரும் தங்களின் விருப்பமான மற்றும் தாய்மொழியில் பதவி ஏற்றது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக, தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த எம்பிக்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இதற்கிடையே, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, பாஜக எம்.பி. ஓம் பிர்லா மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மக்களவை சபாநாயகராக பொறுப்பேற்க உள்ள பா.ஜ.க.வின் ஓம் பிர்லாவுக்கு, காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் ஓம் பிர்லாவுக்கு ஆதரவு தெரிவிக்க தீர்மானித்துள்ளோம் என தெரிவித்துள்ளார். 17-வது மக்களவையின் சபாநாயகருக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: