எம்.பி., எம்.எல்.ஏ., தேர்தலை விட நடிகர் சங்க தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது: ஐகோர்ட் கருத்து

சென்னை: நடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத மாற்று இடத்தை நாளை தெரிவிக்க நடிகர் சங்கத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் வருகிற 23ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்தல் சென்னை அடையாறில் இருக்கும் சென்னை எம்.ஜி.ஆர்., ஜானகி கல்லூரியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால், காவல்துறை அனுமதி தர மறுத்துள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் எனவும், முக்கிய பிரமுகர்கள், நீதிபதிகள், அமைச்சர்கள் உள்ள பகுதி என்பதால், அங்கு தேர்தல் நடத்த அனுமதிக்கமுடியாது என மறுப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், ஜூன் 23ல் எம்.ஜி.ஆர்.ஜானகி கல்லூரியில் நடக்கும் நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு விஷால் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எம்.ஜி.ஆர்.ஜானகி கல்லூரியில் நடிகர் சங்கத் தேர்தல் நடத்தினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்று நீதிபதி கருத்து தெரிவித்தார். மேலும் அங்கு தேர்தல் நடத்த அனுமதிக்க முடியாது எனவும் உத்தரவிட்டார். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத மாற்று இடத்தை நாளை தெரிவிக்குமாறு நடிகர் சங்கத்திற்கு ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டார். குறிப்பாக நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி போன்ற மாற்று இடத்தை தேர்வு செய்ய நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். எம்.பி., எம்.எல்.ஏ., தேர்தலை விட நடிகர் சங்க தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதாக நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். இதையடுத்து, நடிகர் சங்கத் தேர்தலை பற்றி தாம் கவலைப்படவில்லை எனவும், மக்களுடைய பாதுகாப்பு முக்கியம் எனவும் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் நாளை இதுதொடர்பாக உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.

Related Stories: