தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் ராணுவ அதிகாரி பலி: ஐஇடி குண்டு வெடித்து 11 பேர் காயம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ மேஜர் ஒருவர் பலியானார். ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான்.ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அச்சபல் என்ற பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்து பாதுகாப்பு படையினர் நேற்று அங்கு விரைந்தனர். அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு  நடத்தினர். இதில், ராணுவ மேஜர் ஒருவர் பலியானார். மற்றொரு அதிகாரியும், 2 வீரர்களும் படுகாயமடைந்தனர்.

பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்திலிருந்து ஏராளமான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.இதற்கிடையே, தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஈத்கா அரிஹல் பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து, மண்ணில் ஐஇடி வகை குண்டுகளை தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்தனர். வாகனத்தின்  அருகில் இந்த குண்டு வெடித்து சிதறியதில் 9 வீரர்கள் உட்பட 11 பேர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது.கடந்த பிப்ரவரி 14ம் தேதி புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 44 பேர் பலியாகினர். அச்சம்பவம் நடந்த இடத்திலிருந்து 27 கிமீ தொலைவில் ஐஇடி குண்டு புதைத்து  வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: