சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் இருப்பது போன்ற தோற்றத்தை சிலர் ஏற்படுத்தியுள்ளனர்; அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேச்சு

சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தை போக்க எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர் பேசுவதாவது;  தமிழகத்தில் குடிநீர் விநியோகத்தை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் நவம்பர் மாதம் வரை தண்ணீர் பஞ்சம் இருக்காது. பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தெரிவித்துள்ளார். சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் இருப்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகிறார்கள். சென்னை மற்றும் சுற்றுவட்டார இடங்களுக்கு தொடர்ந்து குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வழங்கப்பட்டு வரும் 525 மில்லியன் லிட்டர் குடிநீர் நவம்பர் வரை வழங்கப்படும்.

சென்னையில் நாளொன்றுக்கு குடிநீர் டேங்கர் லாரிகளை 10,000 நடைகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்த வேண்டும்; பூங்காக்களை பராமரிக்க குடிநீரை பயன்படுத்த கூடாது. தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சனை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் பிரச்சனை தொடர்பாக தமிழக அரசிடம் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க அரசுக்கு ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் நிலை குறித்தும் இன்று விளக்கமளிக்க அரசுக்கு கடந்த வாரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தண்ணீர் பிரச்சனையால் எந்த ஹோட்டல்களையும் மூடவில்லை என உரிமையாளர்கள் கூறியுள்ளனர். தண்ணீர் பிரச்சனையால் சென்னையில் ஹோட்டல்கள் மூடல் என தவறான பரப்புரை செய்கிறார்கள். ஹோட்டல்களில் வாழை இலை, பாக்குமட்டை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐ.டி. நிறுவன பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவது வழக்கமானதுதான். ஐ.டி. நிறுவனத்தில் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டால் நிவர்த்தி செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது. 100 நாட்கள் வேலை திட்டம் மூலம் நீர் நிலைகள் தொடர்ந்து தூர்வாரப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு அதிகாரிகளும் தங்களுடைய குடும்பத்திற்கு வரும் பிரச்சனையை போல் இந்த குடிநீர் பிரச்சனையை கையாள வேண்டும். அனைவரும் உடனடியாக களத்திற்கு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: