பாலியல் தொழிலுக்காக கடத்திவரப்பட்ட 5 வங்கதேச பெண்கள் பெற்றோரிடம் ஒப்படைப்பு: சென்னை சட்டப்பணிகள் ஆணையக்குழு நடவடிக்கை

சென்னை: பாலியல் தொழிலுக்காக 4 ஆண்டுகளுக்கு முன்பு கடத்திவரப்பட்ட 5 வங்கதேச பெண்களை மீட்டு சென்னை சட்டப்பணிகள் ஆணையக்குழு அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைத்தது.சென்னையில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் வங்கதேசத்தை சேர்ந்த மைனர் பெண் ஒருவர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விடுதியில் சோதனை நடத்தி மைனர் பெண்ணை மீட்டு,  பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்களை கைது செய்தனர். இதையடுத்து அந்த பெண் சென்னையில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். மேலும் அந்த பெண் தங்களது பெற்றோரை பார்க்க வேண்டும், ஊருக்கு செல்ல  வேண்டும் என்று தினமும் அழுது வந்துள்ளார். இந்நிலையில் சென்னை சட்டப்பணிகள் ஆணைய குழுவின் செயலாளர் நீதிபதி ஜெயந்தி காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது, பாதிக்கப்பட்ட பெண் குறித்து தெரியவந்துள்ளது. பின்பு  அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் கடந்த 2015ம் ஆண்டு கடத்திவரப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து நீதிபதி, பெண்ணிடம் உரிய மனு பெற்று, வங்கதேச அதிகாரிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பெண்ணின் விவரங்களை தெரிவித்தார். பின்னர் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் சில மணி நேரத்தில்  பெற்றோரின் விவரங்கள் தெரியவந்தது. இதையடுத்து நீதிபதி அவர்களின் பெற்றோரிடம் பாதிக்கப்பட்ட பெண்ணை பேச வைத்தார். இதை தொடர்ந்து அரசுக்கு தகவல் தெரிவித்து பெண்ணை விமானம் மூலம் அனுப்பி வைப்பதற்கான  நடவடிக்கைகளை எடுத்து வந்தார். இந்நிலையில், மேலும் 4 பெண்கள் பல்வேறு காப்பகங்களில் இருப்பதாக தெரிவித்தனர். பின்னர் அவர்களுக்கும் சேர்த்து நீதிபதி அரசிடமும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமும் பேசி விமானத்துக்கு ஏற்பாடு செய்து, இரு நாட்டு அரசுகளின்  உரிய ஆவணங்களை பெற்று 5 பேரையும் நேற்று காலை 5 மணிக்கு சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து வங்கதேச தூதரகத்தின் மூலம் பெண்களின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, விமான நிலையத்திற்கு  வரவழைக்கப்பட்டிருந்தனர். அதன்படி 5 பேரும் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதற்கு முழு முயற்சி எடுத்து விரைந்து செயல்பட்ட சட்டப்பணிகள் ஆணையகுழு செயலாளர் நீதிபதி ஜெயந்திக்கு அதிகாரிகள், பெற்றோர்கள், காப்பகத்தினர் பாராட்டுகளை  தெரிவித்தனர்.

Related Stories: