நடிகர் சங்கதேர்தல் நடைபெறும் நாளில் பாதுகாப்பு வழங்க வேண்டும்: கமிஷனரிடம் நடிகர் விஷால் மனு

சென்னை: நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுவதையடுத்து போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நடிகர் விஷால் நேற்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பாளர் இறுதி பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் போட்டியிடுகின்றனர். அதைப்போன்று சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் தலைவர் பதவிக்கு பாக்யராஜூம், செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரசாந்த் போட்டியிடுகின்றனர். பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறும். இந்த நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி நேற்று போலீஸ் கமிஷனர் ஏ.கே விஸ்வநாதனிடம் பாண்டவர் அணி சார்பில் நடிகர் விஷால், பூச்சி முருகன் ஆகியோர் மனு அளித்தனர்.

பின்னர் நடிகர் விஷால் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் 23ம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெறுகிறது. அதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தோம். அவரும் கண்டிப்பாக பாதுகாப்பு அளிப்பதாக கூறினார். எந்த பிரச்னையும் இல்லாமல் தேர்தல் நடத்தப்படும் என்று உத்தர வாதம் அளித்துள்ளோம். நல்ல முறையில் நடத்த வேண்டும் என்று நாங்களும் விரும்புகிறோம். மேலும் அந்த இடத்தில் போதிய வசதிகள் இருக்கிறது என்று கூறுகிறார்களே என்று கேட்டதற்கு அந்த கல்லூரியில் 4 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர்கள் கல்லூரிக்கு தினமும் வந்து செல்கின்றனர். கல்லூரிக்குள் 500க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்தும் அளவிற்கு பார்கிங் வசதி உள்ளது. ஏற்கனவே ஆயிரம் தபால் ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இன்னும் 1800 ஓட்டுகள் பதிவாக உள்ளது. அதனால் இடநெருக்கடி இருக்க வாய்ப்பில்லை. சட்டத்தையும், போலீசையும் எப்போதும் மதிக்ககூடியவர்கள் இந்த தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: