தாக்கபட்ட மருத்துவரின் மருத்துவ செலவை அரசே ஏற்கும்... மருத்துவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்கத் தயார் : மம்தா பானர்ஜி

கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் தாக்கபட்ட மருத்துவரின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரியில் கடந்த திங்கள் கிழமை நோயாளியின் உறவினர் ஒருவர் இளம் மருத்துவர் ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் மருத்துவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும் கடந்த ஐந்து நாட்களாக மேற்குவங்க மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தை நடத்தி வருவதால் நோயாளிகள் கடும் அவதியடைந்துள்ளனர். மேற்குவங்க மாநில தலைமைச் செயலகத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்துமாறு முதல்வர் மம்தா பானர்ஜி அரசு மருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் இதனை ஏற்க அவர்கள் மறுத்து விட்டனர். இந்நிலையில், மேற்கு வங்கத்தில் தாக்கபட்ட மருத்துவரின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேலும் மருத்துவரை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முன்வர வேண்டும். மருத்துவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்கிறேன். நீங்கள் அரசியலமைப்பு சட்டத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். நாங்கள் எந்த ஒரு தனி மனிதனையும் கைது செய்ய மாட்டோம். மருத்துவர்களுக்கு எதிராக எவ்வித போலீஸ் நடவடிக்கையும் இருக்காது. மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த இரண்டு நாட்களாக காத்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.

Related Stories: