பூமி வெப்பமயமாதலை தடுக்க முயற்சி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4 லட்சம் விதைப்பந்து தூவும் பணி

* கரூர் மாணவி சாதனைப்பயணம்

கரூர் : பூமி வெப்பமயமாதலை தடுக்க கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை சென்று 4 லட்சம் விதைப்பந்துகளை தூவும் பணியை கரூர் மாணவி துவக்கினார். கரூர் ராமேசுவரப்பட்டியை சேர்நத சங்கீதா, ரவீந்திரன் தம்பதியரின் மகள் ரக்‌ஷனா. 7ம் வகுப்பு மாணவியான இவர் சுற்றுச்சூழலுக்காக ஏற்கனவே பல செயல்பாடுகளை மேற்கொண்டவர். தற்போது புவி வெப்பமயமாதலை தடுக்கவும், உலக அமைதிக்காகவும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 8 ஆயிரம் கிமீ தூரம் சென்று 4 லட்சம் விதைப்பந்துகளை ஒரு கிமீக்கு 50 விதைப்பந்து வீதம் தூவ முடிவு செய்துள்ளார், இதற்காக விதைப்பந்துகளையும் தயாரித்துள்ளார். கரூர் வேலம்மாள் பள்ளியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இச்சாதனை பயணத்தை துவக்கினார்.

கரூர் கோட்ட தலைமை வன அலுவலர் நடராஜன் தலைமை வகித்து பேசினார். அரசு மருத்துவமனை டாக்டர் தீபா செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் விதைப்பந்துகள் மைதானத்தில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. புறவழிச்சாலையில் விதைப்பந்துகள் தூவப்பட்டன. மேலும் லாரிகளில் விதைப்பந்துகளை ஏற்றி கன்னியாகுமரி புறப்பட்டார். அங்கிருந்து காஷ்மீர் செல்கிறார். சாலையோரம் விதைப்பந்துகள் தூவப்படுகிறது.

இது குறித்து ரக்‌ஷனா கூறியது: உலக அமைதிக்காக 6 வகை விழிப்புணர்வு பிரசாரம் செய்கிறேன். புவி வெப்பமாதல் தடுக்க அவரவர் பகுதியில் மர விதைகளை விதை பந்துகளாக தயார் செய்து தூவினால் மரங்கள் வளரும். பெண் கல்வியை ஊக்குவித்தல், பறவை இனம் காப்பது, இயற்கை விவசாயத்தை மேம்படுத்துவது, குழந்தை தொழிலாளர் முறையை தடுப்பது, பாலியல் வன்கொடுமையை தடுப்பது போன்ற 6 அம்சங்களை பயணத்தினபோது விழிப்புணர்வு பிரசாரம் செய்கிறேன் என்றார்.

கோட்ட தலைமை வன அலுவலர் பேசுகையில், 2006ம் ஆண்டு வரை கரூர் மாவட்டத்தில் வனபரப்பானது 1.5 சதவீதம் இருந்தது. தற்போது இது 2.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. காரணம் 2011ம் ஆண்டு முதல் 14 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இதனால் வனப்பரப்பு அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் 2 லட்சம் மரக்கன்றுகள் வழங்கி பொது இடங்களில் நடப்பட உள்ளது என்றார்.

Related Stories: