டெல்லி சென்றுள்ள முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு

புதுடெல்லி: நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்தார். டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் அவரை சந்தித்து முதல்வர் பழனிசாமி பேசினார்.

நிதி ஆயோக் கூட்டம்:

டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளும்படி அனைத்து மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றதை தொடர்ந்து நடைபெறும் முதல் நிதி ஆயோக் கூட்டம் இதுவாகும். நிதி ஆயோக் அமைப்பின் 5வது ஆட்சிமன்றக் குழு கூட்டம் ஆகும். இந்தக் கூட்டத்தில் விவசாயம், நீர் மேலாண்மை, பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் மற்றும் எதிர்கால வளர்ச்சி பற்றியும் விவாதிக்கப்படும் என தெரியவந்துள்ளது.

முதல்வர் பழனிசாமி டெல்லி பயணம்:

இந்த நிலையில், நிதி ஆயோக் கூட்டதில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று  டெல்லி சென்றார். அவருடன் தமிழக அமைச்சர்களும், அதிமுக எம்.பிக்கள் சிலரும் டெல்லிக்கு சென்றனர். அங்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தனியாக சந்தித்து பேச நேரம் கேட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது. நேரம் கிடைக்கும் பட்சத்தில், தமிழக அரசியல் நிலவரம், வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி வழங்குவது, புயல் நிவாரண நிதியை கூடுதலாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முதலமைச்சர் முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பிரதமர் மோடியுடன் முதல்வர் சந்திப்பு:

இந்த நிலையில், இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். முதல்வருடன் அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். மேலும் இந்த சந்திப்பில், தமிழகம் சந்தித்து வரும் வறட்சி, காவிரி நீர் பிரச்சனை உள்ளிட்ட விவரங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடுத்துரைத்ததாக தகவல் வெளியாகவுள்ளது. சுமார் 7 நிமிடங்களுக்கு நடைபெற்ற இந்த சந்திப்பில், தமிழக திட்டங்களுக்கு தேவையான நிதியை வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இரவு 9.30 மணிக்கு சந்திக்க உள்ளார். இதனை தொடர்ந்து, மதியம் 1 மணிக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்திக்க உள்ளார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு:

தற்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை முதல்வர் சந்தித்து வருகிறார். மத்திய பட்ஜெட்டில் இருந்து தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்குமாறு சீதாராமனிடம் முதல்வர் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: