தண்ணீர் பிரச்சனையால் பள்ளிகளுக்கு விடுமுறை என்று வெளியான தகவல் வதந்தி: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: தண்ணீர் பிரச்சனையால் பள்ளிகளுக்கு விடுமுறை என்று வெளியான தகவல் வதந்தி என அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் தமிழகத்தில் எந்த பள்ளிகளிலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படவில்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார். அவ்வாறு பள்ளிகளில் தண்ணீர் பிரச்னை குறித்து தகவல் வந்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து பள்ளிகளில் தண்ணீர் பிரச்சனை குறித்து ஜூலை-17ம் தேதி முதல் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக மழையின்மை காரணமாக தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் தண்ணீர் பிரச்சனை அதிகரித்து கொண்டே வருகிறது.

தமிழகத்தில் பல இடங்களில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் என பல இடங்களில் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டு கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. அதேபோல, சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில், கடும் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை காரணமாக, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வழக்கமாக சனிக்கிழமைகளில் இயங்கும் தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளன. அதேபோல, தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதனை முற்றிலும் மறுத்த அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகளுக்கு விடுமுறை என்ற தகவல்கள் வதந்தி என கூறினார். இதையடுத்து, வெளிமாநிலத்தவர்கள் தமிழ் தெரியாமல் ஆசிரியர் பணியில் சேர்வதை தடுக்க தமிழ்வழிச்சான்று கட்டாயம் என தெரிவித்துள்ளார். டி.ஆர்.பி தேர்வுக்கு தமிழ் பாடத்தை படித்தவர்களுக்கும் தமிழ்வழிச்சான்றை பள்ளிக்கல்வித்துறை கட்டமாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்கள் குழப்பமடைந்த நிலையில் அமைச்சர் இந்த தகவல்கள் தெரிவித்துள்ளார். பல்வேறு மொழி பேசும் சிறுபாண்மை மக்களும் தமிழை படித்து இருக்க வேண்டும் என்பதால் தமிழ்வழிச்ச்சான்று கட்டாயம் என தெரிவித்துள்ளார்.

Related Stories: