நித்திரவிளை அருகே கடல் சீற்றத்தால் அலைதடுப்பு சுவர் சேதம்: சீரமைப்பு பணி தொடங்கியது

நித்திரவிளை: குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. அதே நேரம் கடற்கரை பகுதிகளில் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் கடந்த ஐந்து நாட்களாக பைபர் மற்றும் கரைமடி வள்ளத்தில் சென்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. நித்திரவிளை, கொல்லங்கோடு, புதுக்கடை, களியக்காவிளை உள்ளிட்ட மீனவ கிராமங்களை பாதுகாக்க கடலரிப்பு தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டிருந்தாலும், அலை சீற்றத்தை தாக்கு பிடிக்காமல் சிதறி விடுகிறது.

இதனால் கடந்த 20 ஆண்டுகளில் நீரோடி முதல் இரயுமன்துறை வரை உள்ள கடற்கரை பகுதிகளில் மூன்று முறை கடலரிப்பு தடுப்புச் சுவர் அமைக்கும் பணி நடத்தப்பட்டது. தற்போதும்  வள்ளவிளை எடப்பாடு முதல் இரவிபுத்தன்துறை எடப்பாடு வரையிலும் பணி நடந்த வண்ணம் உள்ளது.

நீரோடி மீனவ கிராமத்தில் மீன்பிடிக்க வசதியாக சுமார் 50 மீட்டர் தூரம் கடலரிப்பு தடுப்புச் சுவர் அமைக்காமல் விடப்பட்டிருந்தது.  

கடந்த மூன்று தினங்களுக்கு முன் ஏற்பட்ட அலையின் சீற்றத்தால் அந்த பகுதி வழியாக கடல்நீர் ஊருக்குள் புகுந்து மீன் விற்பனைக் கூடத்தை உடைத்து தள்ளியது. இன்னும் அலையின் சீற்றம் தொடர்ந்தால் சாலை துண்டிக்கப்பட்டு விடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் நீரோடியில் கடலரிப்பு தடுப்புச் சுவர் அமைக்க மீனவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.  

சம்பவ இடம் வந்து பார்வையிட்ட கிள்ளியூர் தாலுகா வட்டாட்சியர் கோலப்பன், ராஜேஷ்குமார் எம்எல்ஏ ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து நேற்று காலை முதல் நீரோடி சர்ச் முன்பகுதியில் தற்காலிக கடலரிப்பு தடுப்புச் சுவர் அமைக்கும் பணி நடக்கிறது. கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால், மீனவர்கள் கடந்த ஐந்து நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை.

Related Stories: