பள்ளிகள் அருகே நொறுக்குத்தீனி விளம்பரங்கள் செய்ய தடை: இந்திய உணவு பாதுகாப்பு, தர ஆணையம் முடிவு

புதுடெல்லி: உடலுக்கு கேடுவிளைவிக்கும் நொறுக்கு தீனி பற்றிய விளம்பரங்கள், பள்ளி வளாகங்கள் மற்றும் அதைச் சுற்றிலும் வைப்பதற்கு தடை விதிக்க இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) முடிவு செய்துள்ளது. அசோசம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘பள்ளி மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு’ என்ற நிகழ்ச்சியில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய தலைமை செயல் அதிகாரி பவன் குமார் அகர்வால் கூறியதாவது:

பள்ளிக் குழந்தைகளுக்கு கிடைக்கக் கூடிய பாதுகாப்பான மற்றும் சத்தான உணவு வகைகளின் உத்தேச பட்டியல் மற்றும் வரைவு ஒழுங்குமுறை விதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது சுகாதாரத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பள்ளியில் படிக்கும் மாணவ,  மாணவியருக்கு பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை  எடுக்கப்படுகிறது.

பள்ளி வளாகங்கள், அதைச் சுற்றிலும் 50 மீட்டர் தொலைவுக்கும் உடலுக்கு கேடுவிளைவிக்கும் தரமற்ற, சத்து குறைவான நொறுக்கு தீனிகள் பற்றிய விளம்ரங்கள் வைப்பதை கட்டுப்படுத்தவும், தரமற்ற உணவு வகைகளை விற்பதை தடுக்கவும் உத்தேசித்துள்ளோம். வரைவு மசோதாவில் பள்ளி மாணவர்களுக்கு சரிவிகித உணவு வகைகள் என்ன என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எது சுகாதாரமான உணவு என்பதை வரையறுக்க அதற்கான துறைகள் உள்ளன. அதனால், நாங்கள், உடல் நலனுக்கு கேடுவிளைவிக்காத தரமான உணவு எது என்பதை சுட்டிக் காட்டியுள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.

Related Stories: