கும்மிடிப்பூண்டி பஜாரில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட எளாவூர், நத்தம், சுண்ணாம்புகுளம், மங்காவரம், அப்பாவரம், புதுகும்மிடிப்பூண்டி, பூவலம்பேடு, மாதர்பாக்கம், ஆரம்பாக்கம், அயநெல்லுர், புதுவாயில் உள்ளிட்ட கிராமமக்கள் பல்வேறு தேவைக்காக கும்மிடிப்பூண்டி பஜாருக்குத்தான் வரவேண்டியுள்ளது. குறிப்பாக பத்திரப்பதிவு, நீதிமன்றம், போலீஸ் நிலையம், மார்க்கெட் என பல்வேறு இடங்களுக்கு பைக், கார் உள்ளிட்ட வாகனங்களில் வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். இந்நிலையில், கும்மிடிப்பூண்டி பேருராட்சிக்குட்பட்ட கும்மிடிப்பூண்டி பஜார், ரெட்டம்பேடு சாலையில் இருந்து மின் வாரிய அலுவலகம் வரை சாலை விரிவாக்க பணி ஓராண்டாக நடந்தது. இதில், நடைபாதை கடைகளை அகற்றி, கால்வாய் அமைக்கும் பணி முடிந்துள்ளது.

இந்நிலையில் மீண்டும் நடைபாதை கடைகள் ஆக்கிரமித்துள்ளதால் மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது. இதனால் பெரும்பாலான பஸ்கள், கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலை வழியாக செல்கிறது. இதே பகுதியில் சுமார் 30 அடி அளவுக்கு காலி இடம் உள்ளது. அப்படி இருந்தும், நடைபாதையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்கின்றனர். இதை நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும், பேரூராட்சி செயல் அலுவலரும் கண்டும் காணாமலும் இருக்கின்றனர். ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற மாவட்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: