நெல்லை அருகே ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரம்: உறவினர்கள் சாலை மறியல்

திருநெல்வேலி: நெல்லை தச்சநல்லூர் அருகே ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தச்சநல்லூர் அருகே கரையிறுப்பு பகுதியை சேர்ந்த அசோக் என்ற இளைஞர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சில தினங்களுக்கு முன் சாலையில் நடந்து சென்ற அசோக்கின் தாய் மீது அதே பகுதியை சேர்ந்த மற்றோரு சமூகத்தை சேர்ந்த சிலர் இருசக்கர வாகனத்தில் வந்து மோதியதாக கூறப்படுகிறது. இதனைத் தட்டி கேட்கப்போய் அசோக்குக்கும் அந்த கும்பலுக்கும் தகராறு ஏற்பட்டு காவல் நிலையத்தில் இருதரப்பினரும் புகார் அளித்துள்ளனர். இருவரையும் சமாதான பேச்சுவார்த்தைக்காக போலீசார் அழைத்திருந்த நிலையில் புதன் கிழமை இரவு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அசோக்குமாரை அங்கு வந்த கும்பல் ஒன்று அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு உடலை ரயில்வே தண்டவாளத்தில் வீசி சென்றுள்ளது.

தகவல் அறிந்து போலீசார் வருவதற்குள் அங்கு ஒன்றுக்கூடிய அசோக்கின் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை சமாதானம் செய்த போலீசார் அசோக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சாலைமறியல் காரணமாக அங்கு பலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: