தேர்வு முடிவு வெளியிடுவதில் எச்சரிக்கை தேவை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணம் வாங்கி கூடுதல் மதிப்பெண்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

மதுரை:  ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணம் பெற்றுக்கொண்டு அதிக மதிப்பெண் வழங்கி முறைகேடு நடந்த விவகாரத்தில், தேர்வு முடிவு வெளியிடுவதில் அரசும் கல்வித்துறையும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் உள்ள மாவட்ட கல்வியியல் பயிற்சி நிறுவனத்தில் விடைத்தாள் திருத்துவதில் பணம் பெற்றுக்கொண்டு அதிக மதிப்பெண் வழங்கி முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து மறுமதிப்பீடு செய்ததில் புகார் எழுந்தது உண்மையென தெரிய வந்தது. முதலில் 50 மதிப்பெண் பெற்ற நபர், மறுமதிப்பீட்டில் மிக குறைவான மதிப்பெண் பெற்றதும், 41 மதிப்பெண் வரையில் வித்தியாசம் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அரசு தேர்வுகள் துறை இயக்குநர், விரிவுரையாளர்கள் 10 பேருக்கு கடந்த மே மாதத்தில் மெமோ கொடுத்துள்ளார். இந்த மெமோவை ரத்து செய்யக்கோரி விரிவுரையாளர் நிர்மலாதேவி உள்ளிட்ட 10 பேர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர்.  

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் நேற்று பிறப்பித்த உத்தரவு: தேர்வுகளில் விடைத்தாள்கள் முறையாகவும், நேர்மையாகவும் திருத்தப்படுகிறது என்ற நம்பிக்கையில் தான் லட்சக்கணக்கான இளைஞர்கள் தேர்வுகளை எதிர்கொள்கின்றனர். ஆனால், தற்போது விடைத்தாள் திருத்தத்தில் தவறு நடந்து வருகிறது. பல்கலைக்கழகங்கள் மற்றும் பல நிறுவனங்கள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த குற்றச்சாட்டுகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விடைத்தாள் திருத்தும் பணி நியாயமாக நடப்பதையும், இனிமேல் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வராமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுவதை தடுக்க வினாத்தாள் தயாரித்தல், விடைத்தாள் திருத்தம், தேர்வு முடிவு வெளியிடுதல் போன்ற நடவடிக்கைகளில் அரசும், கல்வித்துறையும் இரட்டை எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தவறு நடந்தால் ஒட்டுமொத்த நடைமுறையையும் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். தவறுகளை திருத்தவும், அதற்கான  வாய்ப்புகளை தடுக்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கடுமையானவை. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. மெமோ வழங்கியதில் தலையிட்டால் விசாரணை பாதிக்கும். எனவே, மனுதாரர்கள் மீதான மெமோவை ரத்து செய்ய முடியாது. மனுதாரர்கள் விசாரணையை எதிர்கொண்டு தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். மெமோவிற்கு 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும். இவர்கள் மீதான துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கையை விரைவில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: