திருமணம் செய்து வைக்க பெற்றோர் எதிர்ப்பு விஷம் குடித்த கல்லூரி மாணவி பலி காதலன் உயிருக்கு போராட்டம்: லாட்ஜில் போலீசார் விசாரணை

சென்னை: சென்னை சவுகார்பேட்டை பள்ளியப்பன் தெருவை சேர்ந்தவர் சுமர் சிங் (23), தனியார் நிறுவன ஊழியர். இவர், அதே பகுதியை சேர்ந்த தனது காதலி காஜல் (21) என்பவருடன் சேப்பாக்கம் மியான் சாகிப் தெருவில் உள்ள தனியார் லாட்ஜில் நேற்று முன்தினம் இரவு அறை எடுத்து தங்கினார். நேற்று காலை லாட்ஜ் ஊழியர்கள் அறையை சுத்தம் செய்ய வந்தனர். அப்போது அறையின் கதவை பலமுறை தட்டியும் அறையை அவர்கள் திறக்கவில்லை. இதனால் லாட்ஜ் மேலாளரிடம் ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். அதன்படி, லாட்ஜ் மேலாளர் திருவல்லிக்கேணி போலீசாருக்கு சம்பவம் குறித்து தகவல் கொடுத்தார்.திருவல்லிக்கேணி போலீசார் லாட்ஜிக்கு வந்து கதவை உடைத்து பார்த்த போது, காதலர்கள் இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தனர்.

இருவரையும் சோதித்த போது, காஜல் இறந்தது தெரியவந்தது. காதலன் சுமர் சிங் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை விஷ முறிவு சிகிச்சை பிரிவில் போலீசார் அனுமதித்தனர். பிறகு காஜல் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமர் சிங் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர். அதில், காஜல் தனியார் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் படித்து வந்ததும், இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்ததும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில் உள்ள தகவல்களில் இருந்து தெரியவந்தது.

இவர்களின் காதலுக்கு காஜல் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. காதல் விவகாரம் தெரிந்ததும் காஜலுக்கு அவசர அவசரமாக பெற்றோர் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்யதாகவும் தெரிகிறது. இதனால் மனமுடைந்த இருவரும் வேறு வழியின்றி தற்கொலை முடிவுக்கு சென்றனர். அதன்படி லாட்ஜில் அறை எடுத்த இருவரும் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் 4 பேர் விஷம் குடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் நடந்த நிலையில், மற்றொரு சம்பவமாக லாட்ஜில் காதல் ஜோடி விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: