லோக் ஆயுக்தா குழு நியமனம் எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு: விசாரணை தள்ளிவைப்பு

மதுரை: லோக் ஆயுக்தா குழு நியமனத்தை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. மதுரை மாவட்டம் மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வக்கீல் பி.ஸ்டாலின், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் ஊழல் புகார்களை விசாரிப்பதற்கான லோக் ஆயுக்தா குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழக அரசின் சார்பில் கடந்த ஏப். 1ல் அரசாணை வெளியிடப்பட்டது. முதல்வர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்ட தேர்வு குழு கூடி யாரை நியமிப்பது என்பது குறித்து முடிவு செய்து, அந்த நபர்களை கவர்னருக்கு பரிந்துரைக்க வேண்டும். இது தான் சட்டப்படியான நடைமுறை.

லோக் ஆயுக்தா குழுவினரை தேர்வு செய்வதற்கான தேர்வுக்குழுவின் கூட்டம் கடந்தாண்டு டிசம்பரில் நடந்தது. இந்தக் குழு கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்கவில்லை.

சட்டப்படி 3 பேரும் சேர்ந்து எடுக்கும் முடிவே இறுதியானது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்காத நிலையில், முதல்வர் மற்றும் சபாநாயகர் மட்டும் லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்களை இறுதி செய்து  பரிந்துரைத்துள்ளனர். இதை ஏற்று லோக் ஆயுக்தா தலைவரும், உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, சட்டப்படி இல்லாத தமிழக லோக் ஆயுக்தா குழுவின் நியமனம் செல்லாது என்பதால், அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர், மனுதாரர் தரப்பில் வழக்கில் தொடர்புடையவர்களை எதிர்மனுதாரர்களாக சேர்த்து மனு செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 17க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: