ஆந்திர மாநில புதிய ஆளுநராக முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நியமனம்: குடியரசுத் தலைவர் உத்தரவு

டெல்லி: ஆந்திர மாநில புதிய ஆளுநராக முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நரேந்திர மோடி தலைமையிலான கடந்த ஆட்சியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ், இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிடவில்லை. தனது உடல்நலம் கருதி மீண்டும் தேர்தலில் போட்டியிடவில்லை என்று சுஷ்மா ஸ்வராஜ் விளக்கமளித்திருந்தார். இந்த நிலையில், ஆந்திர ஆளுநரான நரசிம்மனுக்கு பதிலாக சுஷ்மா சுவராஜ் அவர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று ஆந்திர மாநில ஆளுநராக இருந்த நரசிம்மன், டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர்களை சந்தித்ததை அடுத்தே இந்த அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் ஆட்சி மாறியதை அடுத்தே நிர்வாக வசதிக்காக கவர்னரும் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆளுநர் நரசிம்மன்:

ஆந்திர மற்றும் தெலங்கானா ஆளுநராக இருப்பவர் நரசிம்மன். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான இவர், முதலில் சட்டீஸ்கர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன்பின் கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆந்திராவுக்கு மாற்றப்பட்டார். கடந்த  2010ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி, இவர் ஆந்திர முதல்வராக பதவியேற்ற கிரண் குமார் ரெட்டிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன்பின் ஆந்திரா இரண்டாக பிரிக்கப்பட்டது. இரு மாநிலங்களுக்கும் இவர்தான் ஆளுநர். தெலங்கானா பிரிந்தபோது, அதன் முதல்வராக பொறுப்பேற்ற சந்திரசேகர ராவுக்கு கடந்த 2014 ஜூன் 2ம் தேதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதே ஆண்டில் ஜூன் 8ம் தேதி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

கடந்தாண்டு இறுதியில் தெலங்கானாவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி வெற்றி பெற்றது. இதனால் முதல்வர் சந்திரசேகர ராவுக்கு இரண்டாவது முறையாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கடந்த 30-ம் தேதி ஆளுநர் நரசிம்மன் 5-வது முறையாக ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சுமார் 10 ஆண்டு கால ஆளுநர் பதவிக் காலத்தில், 5 முதல்வர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் அரிய வாய்ப்பு நரசிம்மனுக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: