அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறும் பரபரப்பு... ராஜன் செல்லப்பா தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை

மதுரை: மதுரை திருப்பரங்குன்றத்தில் ராஜன் செல்லப்பா தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் தோல்வியை தொடர்ந்து, அதிமுகவில் உட்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மதுரை புறநகர் மாவட்டச்செயலாளரும் எம்எல்ஏவுமான ராஜன்செல்லப்பா கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, ‘அதிமுகவில் இரட்டை தலைமை கூடாது. ஒற்றை தலைமை தேவை’ என இரு நாட்களுக்கு முன் அளித்த பேட்டி கட்சியில் புயலை கிளப்பியது.

ஏற்கனவே பல மாவட்டச்செயலாளர்கள், எம்எல்ஏக்களை சந்தித்தும், தொடர்பு கொண்டும் கலந்துரையாடிய பிறகு அனைவரின் எண்ண ஓட்டத்தை அறிந்து தான் கட்சிக்கு இரட்டை தலைமை கூடாது. ஒற்றை தலைமை தேவை என்று சொன்னேன். என்று தெரிவித்தார். இந்நிலையில் கட்சி குறித்தும், தேர்தல் முடிவுகள் குறித்தும் அதிமுகவினர் யாரும் பொது வெளியில் பேசக்கூடாது என்று ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இரட்டைத் தலைமை வேண்டாம் என்று அதிமுக எம்எல்ஏக்கள் ராஜன் செல்லப்பா, குன்னம் ராமச்சந்திரன் ஆகியோர் வெளிப்படையாக கருத்து தெரிவித்ததை தொடர்ந்து இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒற்றை தலைமை கேட்டு 2 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியதை அடுத்து அதிமுகவின் உட்கட்சி பூசல் பூதாகரமாகி உள்ளது.

இதை தொடர்ந்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம் 12ம் தேதி (நாளை மறுநாள்) நடக்கிறது. இதில் பங்கேற்க அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் உட்கட்சி விவகாரம் குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாகவும் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் ராஜன் செல்லப்பா தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: