சென்னை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு எதிரொலி கண்டலேறுவில் தண்ணீர் திறக்கக் கோரி முதல்வர் எடப்பாடி ஆந்திரா பயணம்: தமிழக அரசு ஆலோசனை

சென்னை: சென்னை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் சூழலில், கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பது தொடர்பாக கோரிக்கை வைக்க தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்திக்க தமிழக முதல்வல் விரைவில் ஆந்திரா செல்வார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றின் கொள்ளளவு 11 டிஎம்சி. இந்த நிலையில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை சராசரி அளவை காட்டிலும் குறைவாகவே மழை பெய்தது. இதன் காரணமாக, ஏரிகளில் நீர் மட்டம் எதிர்பார்த்த அளவு உயரவில்லை. இந்த நிலையில் தற்போது 4 ஏரிகளில் 44 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இந்த நீரைக்கொண்டு ஒரு சில நாட்கள் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்ய முடியும். இந்த நிலையில் ெதலுங்கு கங்கா திட்டத்தின் கீழ் ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் இருந்து கடந்த இரண்டு தவணை காலத்தில் 1.9 டிஎம்சி மட்டுமே நீர் திறக்கப்பட்டது. குறிப்பாக, கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் தவணை காலத்தில் 0.37 டிஎம்சி மட்டுமே ஆந்திர அரசு கொடுத்துள்ளது.

இந்த நிலையில், சென்னை மாநகரில் 4 ஏரிகள் வறண்டு வரும் சூழ்நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வீராணம் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் போதுமானதாக இல்லாத நிலையில் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது 68 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணையில் 4.78 டிஎம்சி உள்ளது. அதே நேரத்தில் கண்டலேறு அணைக்கு தண்ணீர் தரும்  312 டிஎம்சி கொள்ளளவு கொண்ட நாகர்ஜூனா சாகர் அணையில் 128 டிஎம்சியும், 215 டிஎம்சி கொள்ளளவு கொண்ட சைலம் அணையில் 32 டிஎம்சியும், 78 டிஎம்சி கொள்ளளவு கொண்ட சோமசீலா அணையில் 3 டிஎம்சி உள்ளது. தற்போதைய நிலையில் நாகர்ஜூனா சாகர் அணையில் இருந்து குடிநீருக்காக கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறக்கலாம். எனவே, குடிநீருக்காக  ஆந்திரா, ெதலங்கானா அரசுகளிடம் தண்ணீர் கேட்க தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுப்பணித்துறை அரசு செயலாளர் பிரபாகர் தலைமையிலான பொறியாளர்கள் குழுவினர் ஆந்திரா, தெலங்கானா மாநில முதல்வர்களை சந்தித்து பேச முடிவு செய்து இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரி

ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: