ஆன்லைன் பதிவு பிரச்னையால் சங்கங்கள் பதிவு தற்காலிகமாக நிறுத்தம்

சென்னை: ஆன்லைனில் பதிவை ஏற்க மறுப்பதால் சங்கங்கள் பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைத்து இருப்பதாக பதிவுத்துறை ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர். தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்களில் வீடு, விளை நிலம், திருமண பதிவு மற்றும் மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள் மூலம் சீட்டு மற்றும் சங்கங்கள் பதிவு செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்தாண்டு பிப்ரவரி முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே அனைத்து பதிவுகளும் பதிவு செய்யப்படுகிறது. ஆரம்பத்தில் பத்திரப்பதிவில் சில இடர்பாடுகள் இருந்தது. ஆனால், தற்போது ஆன்லைன் பதிவில் கொண்டு வந்த மாற்றம் காரணமாக பத்திரப்பதிவு வேகம் எடுத்துள்ளது. குறிப்பாக, 18 ஆயிரம் பேர் வரை ஒரு நாளில் பத்திரம் பதிவு செய்ய முடியும். இருப்பினும் அவ்வப்போது சர்வர் பிரச்னை காரணமாக பத்திரப்பதிவில் சிக்கல் ஏற்பட்டு வருவதை தவிர்க்க முடியாத நிலை தான் உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சங்கங்கள் பதிவு செய்ய ஆன்லைனில் பலர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு சங்கங்களை பதிவு செய்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பதிவுத்துறை ஐஜி அலுவலகத்திற்கு புகார் தெரிவித்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், சங்கங்கள் பதிவு செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து பதிவுத்துறை ஊழியர்கள் சிலர் கூறும் போது, ‘ஆப்லைன் பதிவுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்ற நிலையில் சங்கங்களை பதிவு செய்வதால் அதை ஏற்க மறுக்கிறது. இதனால், தற்காலிகமாக பதிவை நிறுத்தி வைத்துள்ளோம். இதை சரி செய்த பிறகு தான் பதிவை மீண்டும் தொடங்குவோம்’ என்றனர்.

Related Stories: