தென்காசியில் பத்திரப்பதிவுக்கு லஞ்சம் இணை பதிவாளருக்கு 4 ஆண்டு சிறை

நெல்லை: தென்காசியில் பத்திரம் பதிவு செய்ய லஞ்சம் வாங்கிய வழக்கில் தென்காசி இணை பதிவாளருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தென்காசியை சேர்ந்தவர் காந்திசெல்வன். இவர் தனது சொத்தை பத்திரப்பதிவு செய்ய வேண்டி கடந்த 20.8.07ம் தேதி தென்காசி பத்திர பதிவு அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த இணைப்பதிவாளர் சந்தன மாரிமுத்துவை (56) சந்தித்து  தனது சொத்தை பத்திர பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். அதற்கு சந்தனமாரிமுத்து 25 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். காந்திசெல்வன் 7 ஆயிரம் தருவதாக கூறியுள்ளார். ஆனாலும் அவர் லஞ்சம் கொடுக்க விரும்பாமல், மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய 7 ஆயிரத்தை காந்திசெல்வனிடம் கொடுத்தனுப்பினர். 24ம் தேதி தென்காசி பத்திர பதிவு அலுவலகத்தில் சந்தனமாரிமுத்து லஞ்சத்தை பெற்றபோது மறைந்து இருந்த போலீசார் அவரை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு நெல்லை சிறப்பு ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி பத்மா விசாரித்து, சந்தனமாரிமுத்துக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும்,  10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Related Stories: