இந்தியாவிலேயே முதல்முறையாக அதிரடி ஆந்திராவில் 5 துணை முதல்வர்கள்: சாதிக்கு ஒன்று என முதல்வர் ஜெகன்மோகன் தடாலடி

திருமலை: இந்தியாவிலேயே  முதல்முறையாக  ஆந்திராவில் 5 பேருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சாதிக்கு ஒன்று என்ற வகையில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடியாக அறிவித்துள்ளார்.ஆந்திராவின் தாடேபல்லியில் உள்ள முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வீட்டில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஜெகன்மோகன் ரெட்டி பேசியதாவது: அனைத்து பிரிவினருக்கும் உரிய நியாயம் கிடைக்கும் விதமாக எஸ்சி, எஸ்டி, பிசி, மைனாரிட்டி, காப்பு பிரிவுகளை சேர்ந்த 5 பேருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளது. மேலும் 25 பேர் அமைச்சரவையில் இடம் பெற உள்ளனர். அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் அமைச்சரவை பதவியேற்பு நாளை (இன்று) காலை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெறும்.

மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்து முழு மெஜாரிட்டியை கொடுத்துள்ளனர். இந்த நம்பிக்கையை காப்பாற்ற அரசு நிர்வாகத்தில் ஊழல் இன்றி செயல்படும் விதமாக அனைத்து அரசு டெண்டர்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து அதனை உயர்நீதிமன்ற நீதிபதி பரிசீலனை செய்த பிறகே தகுதியானவர்களிடம் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். வரிப்பணம் வீணாகும்: அமைச்சர்களுக்கு என்றால், ஒரு போலீஸ் பாதுகாவலர் உடன் வருவார். ஆனால், துணை முதல்வர் என்றால், முன்புறம் ஒரு பாதுகாவலர் வாகனம், பின்புறம் ஒரு பாதுகாவலர் வாகனம் என 2 வாகனங்கள் வரும். மேலும், சுமார் 10 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். அவர்களுக்கு 2 டிரைவர்கள், 2 வாகனங்கள் வேண்டும். இதுபோன்றவற்றால் தேவையில்லாமல் மக்கள் வரிப்பணம் வீணாகும் என்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

ஆந்திரா புதிய சாதனை

கோவா, அருணாச்சலப் பிரதேச மாநிலங்களில் 2 துணை முதல்வர்கள் பதவி வகித்து இருக்கின்றனர். தற்போதும் 2 துணை முதல்வர்கள் இருக்கின்றனர். இதுவரை 2 மட்டுமே துணை முதல்வர்கள் என்ற எண்ணிக்கையே அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது. இந்நிலையில் ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இந்த சாதனையை முறியடித்துள்ளார். மாநில அமைச்சரவையில் 5 துணை முதல்வர்கள் இடம்பெறுவார்கள் என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி சாதிய அடிப்படையிலான ஜெகன் மோகன் ரெட்டியின் துணை முதல்வர்கள் பதவி நியமனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: