ஆந்திராவில் சோகம் - திருப்பதி சென்ற கார், லாரி மீது மோதி விபத்தில் 5 பேர் பலி

ஹைதராபாத் : ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து திருப்பதி சென்ற கார் ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குண்டூர் மாவட்டம் ருத்ரவரம் கிராமத்தைச் சேர்ந்த சத்திய நாராயண ரெட்டி, அவரது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக காரில் நேற்று இரவு புறப்பட்டனர்.

இவர்கள் வந்த கார் ரேணிகுண்டா மண்டலம் குருராஜு பள்ளி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது வேகமாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேர் திருப்பதி ரூயா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ரேணிகுண்டா காவல் நிலைய அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரியலூர் விபத்தில் நால்வர் பலி

இதனிடையே அரியலூரில் சிமெண்ட் ஆலைக்கு சுண்ணாம்பு கல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி இரு சக்கர வாகனங்கள் மீது மோதிய விபத்தில் இளைஞர்கள் 4 பேர் உயிரிழந்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் டிப்பர் லாரியை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். சிமெண்ட் ஆலைகளுக்கு செல்லும் டிப்பர் லாரிகளை தனி பாதையில் இயக்கக் கோரி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில்  நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் சுமார் 3 மணி  நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: