திருவனந்தபுரத்தில் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்றவர் மரணம்: கொச்சியில் ஒரு பெண் மருத்துவமனையில் அனுமதி

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இறந்துள்ளார். இதற்கிடையே, கொச்சியில் ஒரு பெண் நிபா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கேரளாவில் கடந்த வருடம் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி பெரும் உயிர்சேத த்தை ஏற்படுத்தியது. இந்த காய்ச்சலுக்கு நர்ஸ் லினி உள்பட 17 பேர் இறந்தனர். சுகாதாரத்துறையின் தீவிர நடவடிக்கை காரணமாக இந்த காய்ச்சல் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் உள்ள ஒரு மாணவர் நிபா காய்ச்சல் அறிகுறிகளுடன் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆலப்புழா நுண்ணுயிரி பரிசோதனை கூடத்தில் நடந்த சோதனையில் நிபா வைரஸ் அறிகுறிகள் தெரிந்தது. இதையடுத்து பூனா தேசிய ஆய்வுக்கூடத்தில் நடத்திய சோதனையிலும் அவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கொச்சி மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார். சுகாதார அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டு கேரளா முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் தனி வார்டு அமைக்கவும், காய்ச்சல் நோயாளிகளை தீவிரமாக கண்காணிக்கவும் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா உத்தரவிட்டார்.

நிபா வைரஸ் காய்ச்சலுக்கான மருந்துகள் ஆஸ்திரேலியாவில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. போதுமான மருந்து தயாராக உள்ளது. மேலும் தேவைப்பட்டால் கூடுதல் மருந்து வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள மாணவர் தனியார் மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவருக்கு காய்ச்சல் குறைந்து உடல் நிலை தேறி வருகிறது என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கூறியுள்ளார்.

நிபா பாதித்த வாலிபர் மூலம் மற்றவர்களுக்கும் நிபா வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதால் அவருடன் பழகிய நண்பர்கள், உறவினர்கள், சிகிச்சை அளித்த நர்சுகள் என 311 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 86 பேர் அவர்களது வீடுகளில் தனிமையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிபா வைரஸ் பாதிப்பு இருந்தால் 2 வாரத்துக்கு பின்னரே தெரியவரும் என்பதால் அவர்கள் பிறருடன் பழக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எர்ணாகுளம் வடக்கு பரவூரை சேர்ந்த பெண் ஒருவர் நிபா காய்ச்சல் அறிகுறிகளுடன் எர்ணாகுளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் கிளிமானூரை சேர்ந்த ஒருவர் காசநோய் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு காய்ச்சலும் இருந்ததால் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் இறந்தார். நிபா பாதிப்புக்கான அறிகுறிகள் இருந்ததால் அவர் இறந்திறக்கலாமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அவரது ரத்தம் மற்றும் உமிழ்நீர் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: