சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மாம்பழத்தின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிவு

சென்னை: கோயம்பேட்டில் மாம்பழத்தின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிந்துள்ளது. முக்கனிகளில் முதலாவதான மாம்பழத்தின் சீசன் கடந்த மாதம் 15ஆம் தேதி தொடங்கியது. இந்தியாவில் மாம்பழம் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மாமரங்கள் அதிகளவில் உள்ளன. இந்த பகுதிகளில் அல்போன்சா, மல்கோவா, இமாம் பசந்த், சேலம் பெங்களூரா, நடுசாளை, குதாதத் உள்பட பல்வேறு வகையான மாம்பழங்கள் விளைகின்றன.

இங்கு பறிக்கப்படும் மாம்பழம் இந்தியாவில் பலபகுதிகளுக்கும், இதைத்தவிர அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, துபாய், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. இந்நிலையில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் கோயம்பேட்டிற்கு மாம்பழத்தின் வரத்து அதிகரித்து கொண்டே வருகிறது. மாம்பழங்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டும் அதே வேளையில், வரத்தும் அதிகரித்த வண்ணம் இருப்பது விலை வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.

சீசன் தொடங்கிய போது கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்ட ஹிமாம்பசந்த், மல்கோவா, அல்போன்சா, பங்கனப்பள்ளி, ருமானி, செந்தூரா, பெங்களூரா ஆகிய மாம்பழங்களின் விலை தற்போது 30 முதல் 40 ரூபாய் வரை குறைந்து 60 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: