மடிப்பாக்கம் ஏரிக்கரை நடைபாதையில் குப்பை கழிவால் சுகாதார கேடு: வாக்கிங் செல்வோர் வேதனை

ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட 187வது வார்டு மடிப்பாக்கம் அய்யப்பன் நகர் ஏரிக்கரையில் தினந்தோறும் காலை, மாலையில் நூற்றுக்கணக்கானோர் நடைபயிற்சி செல்கின்றனர். இதன் காரணமாக, சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் நிதியுதவியுடன் ஏரிக்கரையில் கான்கிரீட் நடைபாதை, தடுப்பு வேலி, இருக்கைகள், மின் விளக்கு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது பெண்கள், வயதானவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் இங்கு நடைபயிற்சி செய்து வருகின்றனர். இந்த நடைபாதை அருகே மாநகராட்சி சார்பில் ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் இவற்றில் குப்பையை கொட்டுகின்றனர்.

ஆனால், இந்த குப்பையை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் முறையாக அகற்றுவதில்லை. மேலும், பொதுமக்கள் குப்பை கொட்டும் பகுதிகளில் முறையாக தொட்டியை வைப்பதும் இல்லை. இதனால், நடைபாதை அருகே குப்பை கொட்டப்பட்டு சிதறி கிடக்கிறது. காற்று வீசும்போது இந்த குப்பை நடைபாதையில் அலங்கோலமாக காணப்படுகிறது. அதுமட்டுமின்றி, அகற்றப்படாத குப்பை கழிவுகளால் அப்பகுதி முழுவதும் தூர்நாற்றம் வீசுகிறது. இதனால், நடைபயிற்சி செய்வோர் முகம் சுளிக்கும் நிலை உள்ளது. நடைபாதை அருகே முக்கிய இடங்களில் குப்பை தொட்டிகள் அமைக்கவும், குப்பையை முறையாக அகற்றவும் மாநகராட்சி  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: