பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கு: நீரவ் மோடியின் காவலை ஜூன் 27ம் தேதி வரை நீடித்தது லண்டன் நீதிமன்றம்

லண்டன்: பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் கைதான நீரவ் மோடிக்கு, ஜூன் 27 வரை காவல் நீட்டித்து இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீரவ் மோடியை இந்தியாவிற்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கின் விசாரணை ஜூன் 29-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு, லண்டன் சென்று தலைமறைவான நீரவ் மோடியை நாடு கடத்த உத்தரவிடக்கோரி, அங்குள்ள நீதிமன்றத்தில் இந்திய அரசு சார்பின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், லண்டனில் நீரவ் மோடியை ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். இதையடுத்து லண்டனின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி, நீரவ் மோடி தாக்கல் செய்த 2 மனுக்களையும் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்துருந்த நிலையில், 3-வது முறையாக தாக்கல் செய்திருந்த மனுவையும் கடந்த மே மாதம் 8ம் தேதி தள்ளுபடி செய்தது. மேலும் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, நீரவ் மோடி தரப்பில் சில வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதில், நீரவ் மோடி அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை வாழ முடியாத நிலையில் மிகவும் மோசமாக இருப்பதாகவும், ஜாமீன் அளிக்க நீதிமன்றம் விதிக்கும் எந்த நிபந்தனைகளையும் ஏற்க நீரவ் மோடி தயாராக இருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், பாதுகாப்பு உத்தரவாதத் தொகையை 2 மடங்காக அதிகரித்து அளிக்க தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அவரது தரப்பு வாதங்களை நீதிமன்றம் ஏற்க மறுத்தது.

நீரவ் மோடிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை என்றும், ஆதலால் ஜாமீன் அளித்தபிறகு, அவர் சரணடையாமல் போகலாம் என்ற சந்தேகம் தனக்கு இருப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார். பாதுகாப்பு உத்தரவாதத் தொகையை 2 மடங்காக அதிகரித்து வழங்கினாலும், நீரவ் மோடி சரணடையாமல் போகும்பட்சத்தில், அந்தத் தொகையை கொண்டு சூழ்நிலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார். மேலும் நீரவ் மோடியை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணை வரும் 30ம் தேதி நடைபெறும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதனிடையே, நீரவ் மோடியை இந்தியா அழைத்து வருவதற்கான ஆவணங்களை இந்தியாவின் அமலாக்கத்துறையினர் லண்டன் வெஸ்ட் மினிஸ்ட்டர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.  இதையடுத்து இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த இங்கிலாந்து நீதிமன்றம், நீரவ் மோடிக்கு ஜூன் 27ம் தேதி வரை காவல் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர் நாடு கடத்துவது தொடர்பான வழக்கு விசாரணையை ஜூன்-29ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Related Stories: