தர்மபுரி மாவட்டத்தில் கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் விவசாயிகள் தீவிரம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் கடும் வறட்சியால் கிணறுகள் வறண்டன. இதனால் கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி விவசாயம் சார்ந்த மாவட்டமாக உள்ளது. கிணற்றுப்பாசனத்தில் அதிகளவில் விவசாயப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மாவட்டம் முழுவதும் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய கிணறுகள் உள்ளன. கோடைக்கு முன்பே கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால், நிலத்தடிநீர் அதலபாதாளத்திற்கு சென்றது. இதனால் கிணற்றில் தண்ணீர் இல்லாமல் வறண்டு, விவசாய பணிகள் பாதிக்கப்பட்டன. தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன்பாக வறண்ட கிணறுகளை ஆழப்படுத்தும் பணியில், விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஒரு கிணற்றை ஆழப்படுத்த குறைந்தபட்சம் 1.50 லட்சம் முதல் 6 லட்சம் வரை செலவு செய்கின்றனர்.

நேற்று சவுளுப்பட்டியில் 50 அடி ஆழ கிணற்றை மேலும் 25 அடிக்கு ஆழப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் சின்னசாமி கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் 45 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை விவசாய கிணறுகள் உள்ளன. இதில் 10 சதவீத கிணற்றில்கூட தண்ணீர் கிடையாது. போதிய மழை இல்லாமல், கிணறுகள் அனைத்தும் வறண்டுவிட்டன. பருவமழையை எதிர்நோக்கி சில விவசாயிகள் கிணற்றை ஆழப்படுத்தும்பணியில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, கிணற்றை ஆழப்படுத்த மத்திய, மாநில அரசுகள் மானியத்தில் கடன் வழங்க வேண்டும் என்றார்.

Related Stories: