தொடர்குண்டு வெடிப்பு எதிரொலி: இலங்கை செல்லும் இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்க மத்திய அரசு எச்சரிக்கை

டெல்லி: இலங்கை செல்லும் இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது தேவாலயம், நட்சத்திர விடுதிகள்  என 9 இடங்களில் தொடர் வெடிகுண்டு தாக்கல் நடத்தப்பட்டது. இதில் 350-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.  இவர்களில் 36 பேர் வெளிநாட்டினர். 12 வெளிநாட்டினர் உள்பட 500 பேர் வரை காயமடைந்து உள்ளனர்.  இதுவரை 100--க்கும்  மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட தொடர் குண்டு வெடிப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது.

இந்நிலையில், குண்டு வெடிப்புக்குப் பின்னர் இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், இலங்கையில் அவசர நிலை விலக்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்  தளர்த்தப்பட்டுள்ளன. ஆனாலும் ஆபத்து முழுமையாக நீங்கி விடவில்லை என்று உணர்த்தும் வகையில் இலங்கை செல்லும் இந்தியர்கள் மிகுந்த கவனத்துடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.  இந்தியர்களுக்கு உதவுவதற்காக இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள இந்தியத் தூதரகம் 24 மணி நேரமும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஐ.எஸ். தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த உளவுத்துறையினர் தகவல்களால் கேரளத்திலும் லட்சத்தீவுகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஐ.எஸ். தீவிரவாதிகள்  தமிழகத்திலும் கேரளாவிலும் சதித்திட்டம் தீட்டியதாக வந்த தகவல்களையடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் குழு ஒன்று விசாரணைக்காக இலங்கை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: