பழநியில் சிக்னல் பழுதால் பாலக்காடு ரயில் நிறுத்தம்

பழநி: சிக்னல் பழுதால் பழநி ரயில் நிலையத்தில் பாலக்காடு - திருச்செந்தூர் பயணிகள் ரயில் ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. கேரள மாநிலம், பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூருக்கு பழநி வழியாக தினசரி பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. பாலக்காட்டில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில் காலை 7.45 மணிக்கு பழநி வந்து சேரும். பின் இங்கிருந்து 8.10 மணிக்கு புறப்பட்டு செல்லும். நேற்று காலை 7.45 மணிக்கு பழநி வர வேண்டிய பாலக்காடு ரயில் அரை மணிநேரம் தாமதமாக 8.15 மணிக்கு வந்தது. ரயிலை இன்ஜின் டிரைவர் கண்ணன் இயக்கினார். ரயில் அங்கிருந்து புறப்பட்டு 20 அடி தூரம் சென்ற நிலையில் திடீரென ரெட் சிக்னல் விழுந்தது. இதனால் டிரைவர் ரயிலை நிறுத்தினார். ஸ்டேஷன் மாஸ்டர் முத்துச்சாமி, இன்ஜின் டிரைவரை தொடர்பு கொண்டு சிக்னல் பழுதால் கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை. பிரச்னை எதுவும் இல்லாததால் ரயிலை இயக்குமாறு கூறினார். ஆனால் டிரைவர் ரயிலை இயக்கவில்லை.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்து டிரைவரிடம், ஸ்டேஷன் மாஸ்டர் பேசியதை தொடர்ந்து ஒரு மணிநேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். மேலும் ரயில் செல்வதற்காக மூடப்பட்ட பழநி புதுநகர் ரயில்வே கேட் நீண்டநேரம் திறக்கப்படாததால் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Related Stories: