அரசு ஊழியர்களின் வேலை நாட்கள் 5ஆக குறைப்பு: சிக்கிம் புதிய முதல்வர் பிரேம் சிங் தமாங் அதிரடி

சிக்கிம்: சிக்கிம் மாநிலத்தில் வாரத்தில் 6 நாட்களாக இருந்த அரசு ஊழியர்களின் வேலை நாட்களை 5ஆக குறைத்து முதல்வர் பிஎஸ் கோலே உத்தரவிட்டுள்ளார். கேங்டாக்: கடந்த 24 ஆண்டுகளாக சிக்கிமில் ஆட்சியிலிருந்த பவன்குமார்  சாம்லிங் ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில், தமாங் தலைமையிலான ஆட்சி பதவியேற்றுள்ளது. ஆனால், புதிய அமைச்சரவையில் பெண்களுக்கு இடம் ஒதுக்கவில்லை. சிக்கிம் மாநில சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 17  இடங்களில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. கடந்த 24 ஆண்டுகளாக சிக்கிமில் ஆட்சியிலிருந்த பவன்குமார் சாம்லிங் தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி அரசு 15 தொகுதிகளில் மட்டுமே  வென்று ஆட்சியை பறிகொடுத்தது.

இந்த தேர்தலில் முதல்வராக பொறுப்பேற்ற தமாங் போட்டியிடவில்லை. ஆனால், தனது கட்சி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்தார். தற்போது முதல்வராக தமாங் பதவியேற்றதைத் தொடர்ந்து, 6 மாதங்களில் சிக்கிம் எம்எல்ஏவாக வேண்டிய  கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. சிக்கிம் சட்டப்படி, முதல்வர் உள்பட 12 அமைச்சர்கள் மட்டுமே இருக்க முடியும் என்பதால், 11 எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. கேங்டாக்கில் உள்ள பல்ஜோர் மைதானத்தில்  நடைபெற்ற விழாவில், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சித் தலைவர் பிரேம் சிங் தமாங் என்ற பி.எஸ்.கோலே-க்கு ஆளுநர் கங்கா பிரசாத் பதவிப்  பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில்  முன்னாள் முதல்வர் பவன்குமார் சாம்லிங், சிக்கிம் ஜனநாயக முன்னணி மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். நேபாள மொழியில் பதவியேற்ற தமாங் அமைச்சரவையில், பெண்களுக்கு இடமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிக்கிமில் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள பிஎஸ் கோலே, தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல வாரத்தில் 6 நாட்களாக இருக்கும் அரசு ஊழியர்களின் வேலை நாட்களை 5 நாட்களாக குறைத்து உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் அரசு ஊழியர்கள் தங்கள் உடல்நலத்தோடு குடும்பத்தினர் மற்றும் பெற்றோர், குழந்தைகளை நன்கு கவனிக்க நேரம் கிடைக்கும் என்று கோலே தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு முன் இருந்து அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும்  தொடரும் என்றும் அவர் கூறினார்.

Related Stories: