தமிழகம் முழுவதும் உள்ள 40 சார்பதிவாளர் அலுவலக பணியிடங்கள் சரண்டர்: ஊழியர்கள் இல்லாமல் பத்திரங்களை உடனடியாக திருப்பி தருவதில் சிக்கல்

சென்னை: அலுவலக பணியிடங்கள் சரண்டர் செய்யப்பட்டதால், பத்திரங்களை பொதுமக்களுக்கு திருப்பி தருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் குறைவாக பத்திரம் பதிவாகும் சார்பதிவாளர் அலுவலகங்களை கண்டறிந்து அவற்றை மூட பதிவுத்துறை முடிவு செய்தது. அதன்பேரில் வருவாய் குறைவாகவும், குறைந்த அளவிலான பத்திரங்கள் பதிவாகும் 40 சார்பதிவாளர்  அலுவலகங்களை இனம்கண்டு அந்த அலுவலகங்களை மூட பதிவுத்துறை முடிவு செய்துள்ளது. தொடர்ந்து அங்கு பணிபுரிந்த 100க்கும் மேற்பட்ட பணியிடங்களை அரசுக்கு பதிவுத்துறை சரண்டர் செய்தது.இதை தொடர்ந்து அந்த சார்பதிவாளர் அலுவலகங்களை அருகில் உள்ள பெரிய சார்பதிவாளர் அலுவலகங்களுடன் இணைக்கவும் திட்டமிடப்பட்டது. ஆனால், இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சார்பதிவாளர்  அலுவலகங்களை மூடும் முடிவை பதிவுத்துறை கைவிட்டது. இதை தொடர்ந்து அந்த 40 சார்பதிவாளர் அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டது.

ஆனால், அந்த சார்பதிவாளர் அலுவலகங்களில் பணியிடங்கள் சரண்டர் செய்யப்பட்டதால், பெரிய  அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தற்காலிகமாக அந்த அலுவலகங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால், தற்போது வரை அரசிடம் சரண்டர் செய்யப்பட்ட இடங்களை மீண்டும் பெற நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  இதனால், 40 சார்பதிவாளர் அலுவலகங்களில் பணியாளர்கள் பற்றாக்குறையால் பத்திரங்களை திருப்பி தருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இது குறித்து ஊழியர்கள் சிலர் கூறும் போது, ‘40 சார்பதிவாளர் அலுவலகங்களை மூடுவதற்கு பதிவுத்துறை முடிவு செய்தது. இதனால், அந்த பணியிடங்கள் அரசுக்கு சரண்டர் செய்யப்பட்டது. அதே நேரத்தில் சார்பதிவாளர் அலுவலகங்கள்  மூடப்படாத நிலையில், சரண்டர் செய்த இடத்தில் மீண்டும் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. ஏற்கனவே காலி பணியிடங்களால் பதிவுத்துறை தவித்து வரும் நிலையில் தற்போது சரண்டர் செய்யப்பட்ட  பணியிடங்கள் கூடுதல் பணிச்சுமையால் தவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: