நடுவானில் விமானத்தில் பரபரப்பு போதையில் பணிப்பெண்களிடம் ரகளை செய்த வாலிபர் கைது

சென்னை: விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது போதையில் பணிப்பெண்களிடம் ரகளையில் ஈடுபட்ட ஆசாமியை போலீசார் கைது செய்தனர். குவைத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் தஞ்சாவூரை சேர்ந்த இஸ்மாயில் (33) என்பவர் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். விமானம், நடுவானில் பறந்துவந்தபோது இஸ்மாயில் சிகரெட் பிடித்து சகபயணிகள் முகத்தில்  புகையை கண்டபடி ஊதினார். பாதுகாப்பு காரணங்களுக்காக விமானத்திற்குள் புகைப்பிடிக்க அனுமதி கிடையாது என்பது சட்டவிதி. ஆனால் அதற்கு முரணாக செயல்பட்டதால் சகபயணிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். விமானப்  பணிப்பெண்கள் வந்து இஸ்மாயிலை கடுமையாக கண்டித்தனர். சிகரெட்டை அணைக்கும்படி கூறினர். அந்த ஆத்திரத்தில் இஸ்மாயில் விமானப் பணிப்பெண்களிடம் கலாட்டா செய்ததோடு அவர்களை தடித்த வார்த்தைகளால் திட்டினார். மேலும்  விமானத்திற்குள் கடும் ரகளையிலும் ஈடுபட்டார். இதையடுத்து விமானப் பணிப்பெண்கள் தலைமை விமானியிடம் புகார் செய்தார்.

இதுகுறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானத்தில் ஒரு ஆசாமி கடும் ரகளையில் ஈடுபடுகிறார். விமானம் தரை இறங்கியதும் அவரை சுற்றி வளைத்து பிடிக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறப்பட்டது. சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிலையத்தில்  தயாராக இருந்தனர். விமானத்தில் இருப்பவர் தீவிரவாதியா என்ற சந்தேகம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகள் குவைத்தில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானம் தரையிறங்கும் பகுதியில் தயார் நிலையில் இருந்தனர்.  விமானம் சென்னையில் தரையிறங்கியதும் வேகமாக உள்ளே சென்ற பாதுகாப்பு அதிகாரிகள், ரகளையில் ஈடுபட்ட இஸ்மாயிலை சுற்றிவளைத்தனர். அவரை தனியறைக்கு அழைத்துச் சென்றனர். சாரணையில் இஸ்மாயில் தீவரவாதி இல்லை அவர் குவைத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். தற்போது விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்துள்ளார். விமானத்தில் கொடுத்த மதுவை அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு  போதை தலைக்கேறிய நிலையில் கலாட்டாவில் ஈடுபட்டது தெரியவந்தது. ஆனாலும் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம், இந்த சம்பவம் தொடர்பாக விமான நிலைய மேலாளருக்கு எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தனர். இஸ்மாயிலை விமான  நிலைய போலீசார் கைது செய்தனர்.

Related Stories: