மும்பை: ஒரு நல்ல அரசியல் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘பி.எம். மோடி’ திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று நடிகர் விவேக் ஓபராய் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் சுயசரிதையை கருவாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள ‘பி.எம். மோடி’ திரைப்படத்தில் விவேக் ஓபராய், நரேந்திர மோடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது. ஆனால், மக்களவைத் தேர்தல் காரணமாக ஏப்ரல் மாதம் திரைப்படத்தை வெளியிட சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இதனால், தேர்தல் முடிந்ததை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமையன்று ‘பி.எம். மோடி’ திரைப்படம் வெளியானது. இந்த நிலையில் மராத்தி செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த விவேக் ஓபராய் கூறியதாவது; பிரதமர் நரேந்திர மோடி மிகவும் மரியாதைக்குரிய ஒரு தலைவர். அவரது கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை பெருமையாக கருதுகிறேன். ஒரு நல்ல அரசியல் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள ‘பி.எம். மோடி’ திரைப்படத்தை பார்க்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கேட்டுக் கொள்கிறேன். இந்த படத்தில் நடிப்பதற்காக நான் சம்பளம் ஏதும் வாங்கவில்லை. பிரதமர் மோடி மீதான மரியாதைக்காகவே இந்த படத்தில் நடித்து கொடுத்தேன்.