நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முடிவடைந்ததையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் தளர்வு: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முடிந்ததை அடுத்து தேர்தல் நடத்தை விதிகளை இந்திய தேர்தல் ஆணையம் தளர்த்தியுள்ளது. மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 16வது மக்களவை பதவிக் காலம் வரும் ஜூன் 3-ம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி, ஏப்ரல், மே மாதத்தில் மக்களவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. ஆந்திரா உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளதால் அந்த மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலையும் நடத்துவதற்கான ஆலோசனைகள் செய்யப்பட்டன. அதேபோல், தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடத்த வேண்டுமென அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.

இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த மார்ச் 10-ம் தேதி இரவு முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். பணப்பட்டுவாடா உள்ளிட்ட காரணங்களால், தமிழகத்தில் உள்ள வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 352 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன்  ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக் கொண்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜ மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் கூட்டம் டெல்லியில் நேற்று மாலை 5 மணிக்கு நாடாளுமன்ற மத்திய அரங்கில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் நரேந்திர மோடி, பிரதமராக மீண்டும் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கூட்டம் முடிந்தவுடன், டெல்லி ராஜபவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து ஆட்சியமைப்பதற்கு பிரதமர் மோடி உரிமை கோரினார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் 303 இடங்களில் வெற்றிப்பெற்றாலும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்று, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடித்தை அடித்து, ஆட்சியமைக்க கோரினார். தொடர்ந்து நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்தார். ஆனால், பிரதமர் மோடி வரும் 30ம் தேதி மீண்டும் பதவியேற்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முடிந்ததை அடுத்து தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டதாக இந்திய தேர்தல் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Related Stories: