ரசாயன பைகளை கழுவுவதால் கால்வாய் நீர் நஞ்சாக மாறும் அவலம்: கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம்

திருவொற்றியூர்:   மணலி சாலையில் உள்ள மழைநீர் கால்வாயில் ரசாயன பைகளை கழுவுவதால் தண்ணீர் நஞ்சாக மாறுவதுடன், அதை பருகும் கால்நடைகள் இறக்கும் அபாயம் உள்ளது.   திருவொற்றியூர் எம்ஜிஆர் நகர் அருகே மணலி சாலையோரம் மழைநீர் கால்வாய் உள்ளது. மழை காலத்தில் மணலி, மணலி புதுநகர் போன்ற பகுதிகளில் இருந்து வரக்கூடிய மழைநீர் இந்த கால்வாய் வழியாக சென்று பக்கிங்காம்  கால்வாயில் கலக்கிறது. இந்த கால்வாயில் தேங்கியிருக்கும் நீரை அப்பகுதியில் உள்ள ஆடு, மாடு போன்ற கால்நடைகள் குடித்து வருகின்றன. மேலும் ஆதரவற்ற முதியோர், சன்னியாசிகள் இந்த கால்வாயில் குளிக்கின்றனர்.  இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் உரம் மற்றும் ரசாயன காலி பிளாஸ்டிக் பைகளை இந்த கால்வாயில் கழுவி, சுத்தப்படுத்தி எடுத்துச் சென்று விற்பனை செய்கின்றனர். இதனால் கால்வாயில் உள்ள நீர் மாசடைந்து இதை குடிக்கும்  கால்நடைகள் உயிரிழிந்து வருகின்றன. மேலும், இந்த நீரில் குளிப்பவர்களுக்கு தோல் நோய் ஏற்படுகிறது.

அதுமட்டுமின்றி கால்வாயில் சுத்தம் செய்த காலி பைகளை சாலையில் காயவைக்கின்றனர். இவை காற்றில் பறந்து அந்த வழியாக பைக்கில் செல்பவர்கள் மீது விழுவதால் விபத்து ஏற்படுகிறது. எனவே, இந்த மழைநீர் கால்வாயில்  சட்டவிரோதமாக ரசாயன பிளாஸ்டிக் பைகளை சுத்தம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இந்த மழைநீர் கால்வாயில் தேங்கியுள்ள தண்ணீர் பொதுமக்களுக்கு  பெரிதும்  பயன்படுவதோடு, நிலத்தடி நீர் ஆதாரமாகவும் உள்ளது. சமீப காலமாக இந்த கால்வாயில் சிலர் சட்டவிரோதமாக  ரசாயன பிளாஸ்டிக்  பைகளை கழுவுவதால், நீர் மாசடைந்து வருகிறது. எனவே இதை தடுக்கவும், இந்த கால்வாயை தூர்வாரி சீரமைக்கவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: