தமிழகத்தில் நிலத்தடி நீர் மேலாண்மையை மேம்படுத்த அமைக்கப்பட்டது அரசு கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு மாயம்

சென்னை: தமிழகத்தில் 2001ம் ஆண்டு அரசு கட்டிடங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன வளாகங்களில் ஏற்கெனவே இருந்த மழைநீர் கட்டமைப்புகள் முழுமையாகவும், பாதியளவும் சேதமடைந்துள்ளது. பல இடங்களில் அதற்கான சுவடே காணவில்லை. இதனால் பல இடங்களில் நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்கு சென்றது குறிப்பிடத்தக்கது. அதை மீட்டெடுக்க மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்துப்போனது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் அபாயக்கட்டத்துக்கும் கீழே சென்றுவிட்டதாக நீரியல் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் நிலத்தடி நீரை எடுக்க கடும் கட்டுப்பாடுகள் விடுக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்கு சென்றதற்கு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அரசு காற்றில் பறக்கவிட்டதே காரணம் என்று சமூகநல ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதாவது, மழையால் கிடைக்கும் நீரை சேமிப்பதன் மூலம் ஓரளவு நிலத்தடி நீர் மூலம் தண்ணீர் தேவையை ஒரு அரசு எளிதாக சமாளிக்கலாம் என்றும் அவர்கள் தங்கள் யோசனையையும் தெரிவித்தனர். சராசரியாக நிலத்தில் பெய்யும் மழையில், 40 சதவீதம் நிலத்தின் மேல் ஓடி கடலில் கலப்பதாகவும், 35 சதவீதம் ஆவியாகுவதாகவும், 14 சதவீதம் பூமியால் உறிஞ்சப்படுவதாகவும், 10 சதவீதம் மண்ணின் ஈரப்பதத்திற்கு உதவுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.  

ஆனால் தற்போது பெருநகரங்களில் வீடுகள், கட்டிடங்கள் அருகருகே கட்டப்படுவதும், தவிர திறந்தவெளிகளையும் சிமெண்ட் தளங்கள் அமைத்தும், தார்ச் சாலைகள், கான்கிரீட் சாலைகள் அமைத்தும் மூடி விடுவதால், இங்கு பெய்யும் மழை நீரில் 5 சதவீதம் கூட நிலத்தால் உறிஞ்சப்படுவதில்லை. இதனால் கடலோர நகரங்களில் நிலத்தினுள் புகும் நீரின் அளவு குறைந்து, ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் அதிகமாக எடுக்கப்படும் சூழலில், கடல் நீர் நிலத்தடியில் கலந்து பயன்படுத்த இயலாத அளவிற்கு மாறி விடுகிறது. இதை தடுக்க கடந்த 2001ம் ஆண்டு தமிழகத்தில் கட்டாய மழைநீர் சேகரிப்பு திட்டம் என்ற சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின்படி அனைத்து வீடு, தனியார் மற்றும் அரசு கட்டிடங்கள், பொதுத்துறை, தனியார் தொழிற்சாலை வளாகங்கள் என அனைத்து கட்டமைப்புகளிலும் கட்டாயமாக மழைநீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும். தேவைப்படுவோர்க்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கிக் கொடுக்கும். தவறினால் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புத் துண்டிக்கப்படும் என்று அப்போது எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இதன் மூலம் 2001ம் ஆண்டு தொடங்கி 2006ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் 50 விழுக்காடு வரை நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததாக நீரியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் நிலத்தடி நீரின் தரமும் உயர்ந்ததாகவும் தெரிவித்தனர். அதேபோல் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் அந்தந்த பகுதியில் பெய்த மழையின் தன்மைக்கேற்ப 50 முதல் 70 சதவீதம் வரை நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததாக நீரியல் வல்லுனர்கள் தெரிவித்தனர். குறிப்பாக அரசு அலுவலக கட்டிடங்கள், பொதுத்துறை நிறுவன வளாகங்கள், அரசு ஊழியர் குடியிருப்புகள் ஆகியவற்றில் ஏற்படுத்தப்பட்ட மழைநீர் கட்டமைப்புகள் தொடர் பராமரிப்பில்லாததால் சிதிலமடைந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இது அரசு கட்டிடங்கள் என்றில்லாமல் தனியார் குடியிருப்புகளிலும் அதேநிலை என்று வேதனை தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

செட்டிநாட்டு பகுதிகளில் பாரம்பரிய மழைநீர் சேகரிப்பு

செட்டிநாடு பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்புக்கு என்று சிறப்பான அமைப்புகள் வைத்து கட்டப்பட்டிருக்கின்றன. வானம் பார்த்த செட்டிநாட்டு பகுதிகளான சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை நீரை நம்பியே வேளாண்மை உள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன்பே நகரத்தார் தங்கள் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புக்களை கட்டிவைத்துள்ளனர். மழை நீரை வீணடிக்காமல் காய்ச்சி குடித்தும், மிஞ்சும் மழைநீரை தங்களது வீட்டின் ஓரத்திலேயே கால்வாய்களை அமைத்து வீட்டின் பின்புறம் கிணறு போன்ற உறையுடன் கூடிய மழைநீர் சேகரிப்பு தொட்டியையும் கட்டி வைத்து அதனுள் விழுமாறு அமைத்துள்ளனர். இப்படி இப்பகுதியில் உள்ள வீடுகளில் அந்தக் காலத்திலேயே வடிவமைக்கப்பட்ட மிகச்சிறந்த கட்டமைப்பினால் சிறு துளி தண்ணீர்கூட வீணாகாமல் நிலத்தடியில் சேமித்து வைக்கப்படுகின்றது. அதே போல கழிவு நீரும் வெளியே தெருவில் செல்லாதபடி நிலத்துக்குள்ளேயே கால்வாய் அமைத்து வெளியேற்றப்படுகிறது. இப்படி வீடுகளில் மட்டுமல்லாது கோயில்கள், தெருக்கள் என எல்லா இடங்களிலும் மழைநீரை சேமித்துவைக்கும் தொலைநோக்குடன் செட்டிநாட்டு மக்கள் இருந்து வருகின்றனர். இதனால்தான் இப்பகுதியில் உள்ள குளங்கள் என்றும் வற்றாதவையாக உள்ளன. மொத்தத்தில் நகரத்தார் கட்டிய வீடுகள் யாவும் மழைநீர் சேமிப்புக்கான வடிகால்கள் என கூறலாம்.

மழைநீர் வடிகால்வாய்கள்

தற்போது கழிவுநீர் கால்வாய்களாக நமக்கு காட்சி அளிப்பவை எல்லாம் ஒரு காலத்தில் மழைநீரை மட்டுமே கொண்டு சென்று ஆற்றிலோ அல்லது ஏரியிலோ அல்லது கோயில் குளம், குட்டைகளிலோ சேர்க்கும் கால்வாய்களாகவே விளங்கின. நாளடைவில் ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்புக்குள்ளாக, கால்வாய்கள் எல்லாம் கழிவுநீரை கொண்டு செல்லும் அவலத்துக்கு தள்ளப்பட்டன. குறிப்பாக வேலூர் நகரில் மலையில் இருந்து ஓடிவரும் மழைநீர் மற்றும் ஊற்று நீரை கால்வாய்கள் மூலம் பாலாற்றிலும், கோட்டை அகழியிலும், ஏரியிலும் நமது முன்னோர்கள் சேர்த்தனர். இதன் மூலம் நகரின் நிலத்தடி நீராதாரம் பாதுகாக்கப்பட்டது.

நகர்ப்புற பகுதிகளில் பயன்பாடு

மழைநீர் சேகரிப்புத் திட்டம் நகர்ப்புறங்களில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் மற்றும் மழை வெள்ளத்தை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது. சேமிக்கப்படும் மழைநீர் அன்றாட வீட்டு உபயோகத் தேவைகளுக்கும், கழிப்பறைகளிலும், சலவை மற்றும் குளியலுக்கும் பயன்படுத்தலாம். கடின நீர் உள்ள இடங்களில் மழைநீர் முக்கியத் தேவையாக உள்ளது. மேலும் நன்றாக சுத்திகரிக்கப்பட்ட பின்ன்ரே குடிதண்ணீராகப் பயன்படுத்த வேண்டும்.

நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தும் திட்டம்

நிலத்தடி நீர்மட்டம் உயர மழைநீர் சேகரிப்புத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதேபோல் நிலத்தடி தொட்டி, கிணறு, தெப்பக் குளம் அல்லது குட்டைகளில் சேமிக்கப்படும் மழைநீர் தானாக நிலத்தால் உறிஞ்சிக்கொள்ளப்படுகிறது.

Related Stories: