17வது மக்களவை தேர்தலில் முதல்முறையாக...

27 முஸ்லிம் எம்பி.க்கள்:

இந்த மக்களவை தேர்தலில் பாஜ தனித்து 303 இடங்களை கைப்பற்றி அறுதிப்பெரும்பான்மை பெற்றது. இந்த கட்சி சார்பில் போட்டியிட்ட 6 முஸ்லிம்களில் ஒருவர் கூட எம்பி.யாக தேர்வு செய்யப்படவில்லை. ஆனால், புதிய மக்களவைக்கு 27 முஸ்லிம்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 6 எம்பிக்கள், கேரளா, காஷ்மீரில் தலா 3, அசாம், பீகாரில் தலா 2, பஞ்சாப், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, லட்சத்தீவு, தெலங்கானாவில் இருந்து தலா ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

திரிணாமுல் சார்பில் 5 பேரும், காங்கிரஸ் சார்பில் 4 பேரும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், தேசிய மாநாட்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் சார்பில் தலா 3 பேரும், ஏஐஎம்ஐஎம்.க்கு 2, லோக் ஜனசக்தி, தேசியவாத கட்சி, மார்க்சிஸ்ட், ஏஐயுடிஎப்.க்கு ஒரு முஸ்லிம் எம்பிக்கள் உள்ளனர். முந்தைய மக்களவையில் 23 முஸ்லிம் எம்பி.க்கள் இடம் பெற்றனர்.

8 லட்சம் நோட்டா:

கடந்த  2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை குறிக்கும் வகையில் நோட்டா முறை அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது மொத்தமுள்ள 543 தொகுதிகளிலும் 1.1 சதவீதம் நோட்டா பதிவானது. தற்போது நடைபெற்ற 17வது மக்களவை தேர்தலில் பீகாரில் நாட்டிலேயே அதிகபட்சமாக 8.17 லட்சம் பேர் நோட்டாவில் வாக்களித்து உள்ளனர்.

இது, இந்த மாநிலத்தில் பதிவான வாக்குகளில் 2 சதவீதமாகும். இதில் அதிகபட்சமாக கோபால்கஞ்ச் தொகுதியில் 51,660 நோட்டா பதிவாகி உள்ளது. இதற்கு அடுத்ததாக டாமன் டையுவில் 1.7 சதவீதமும், ஆந்திராவில் 1.49 சதவீதமும், சட்டீஸ்கரில் 1.44 சதவீதமும் நோட்டா பதிவாகி உள்ளது.   பஞ்சாப்பில் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 423 நோட்டா பதிவாகியுள்ளது.

197 பழைய எம்பி.க்கள்:

கடந்த முறை எம்பி.க்களாக இருந்த 197 பேர், இந்த தேர்தலிலும் மீண்டும் வெற்றி பெற்று எம்பி.க்களாகி உள்ளனர். இவர்களில் 27பேர் பெண்கள். இதில், பாஜ சார்பில் 145 பேரும், திரிணாமுல் சார்பில் மேற்கு வங்கத்தில் இருந்து 12 பேர், ஆந்திராவில் தெலுங்கு தேசம் சார்பில் 2 பேர், தெலங்கானாவில் டிஆர்எஸ் சார்பில் 2 பேர், பஞ்சாபில் காங்கிரஸ் சார்பில் 3 எம்பி.க்கள் மீிண்டும் தேர்வாகி உள்ளனர்.

78 பெண் எம்பிக்கள்:

இந்த மக்களவை தேர்தலில் மொத்தம் 8,049 வேட்பாளர்கள் களம் இறங்கியிருந்தனர். இதில், 724 பேர் பெண் வேட்பாளர்கள். இதில் அதிகபட்சமாக 54 பேர் காங்கிரஸ் சார்பிலும், பாஜ சார்பில் 53 பேரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 78 பெண்கள் எம்பிக்களாக தேர்வாகியுள்ளனர். இது, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாகும். கடந்த மக்களவையில் 64 பெண்களும், அதற்கு முந்தைய 15 வது மக்களவையில் 52 பெண்களும் எம்பிக்களாக வெற்றி பெற்றிருந்தனர்.

Related Stories: