எடப்பாடி அரசு பதவியில் இருந்து விலக வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்ப்பையும் தேடிக்கொண்ட எடப்பாடி அரசு பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வைகோ கூறினார். தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதியில் 37 தொகுதியில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து, ைவகோ நிருபர்களிடம் கூறியதாவது:நாடாளுமன்ற தேர்தல் மூலம் தமிழகத்தின் கோடான கோடி மக்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அங்கீகரித்துள்ளனர். தமிழகத்தை வழிகாட்டுகிற தலைவராக, தமிழகத்தை காக்கின்ற தலைவராக அங்கீகரித்துள்ளனர். முதல்வர் பொறுப்பேற்று இருக்கிற எடப்பாடி பழனிச்சாமி இந்த படுதோல்விக்கு பின்னர் ஒரு நாலைந்து தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சியை காப்பாற்றி கொள்ள நினைக்க வேண்டாம். மொத்த தமிழகத்தின் எதிர்ப்பையும் தேடிக்கொண்ட எடப்பாடி அரசு பதவியில் இருந்து விலக வேண்டும். இந்த வெற்றிக்கு தலைவர் ஸ்டாலின் மேற்கொண்ட பிரச்சாரம், வகுத்த தேர்தல் வியூகம், மக்களோடு மக்களாக காலை முதல் இரவு வரை மக்களை சந்தித்து கலந்து உரையாடி விளக்கங்கள் தந்து ஒட்டு மொத்த தமிழகத்தை வழிகாட்டுகிற கலங்கரை விளக்கமாக திமுகவை ஆக்கியிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: