பொல்லாத ஆட்சி அதுக்கு பொள்ளாச்சியே சாட்சி... அதிமுக கோட்டையான கொங்கு மண்டலத்தை உடைத்தெறியும் திமுக

பொள்ளாச்சி: நாடாளுமன்ற தேர்தலில் 39 ஆண்டுகளுக்கு பின் பொள்ளாச்சியில் திமுக வெற்றி பெற உள்ளது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில், வேலூரில் மட்டும் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

மீதமுள்ள 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த மாதம் 18ம் தேதி தேர்தல் நடந்தது. அதோடு, 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடந்தது. அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய 4 பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 19ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் பாஜக 337 இடங்களிலும், காங்கிரஸ் 95 இடங்களிலும், மற்றவை 110 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 37 மக்களவை தொகுதிகளில் திமுகவும், 2 இடங்களில் அதிமுகவும் முன்னிலையில் உள்ளது.

இதில் பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் சண்முகசுந்தரமும், அதிமுக சார்பில் மகேந்திரனும் போட்டியிட்டனர். பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் 18வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் 1,48,967 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இதையடுத்து 39 ஆண்டுகளுக்கு பிறகு பொள்ளாச்சி தொகுதியில் திமுக நேரடியாக வெற்றி பெற உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 1980-ம் ஆண்டு திமுக வேட்பாளர் சி.டி.தண்டபானியும்,  திமுக கூட்டணியில் 1996-ல் தமாகா, 1999, 2004 மதிமுக வென்றது. இதன் பின்னர் நடந்த இரு தேர்தல்களிலும் அதிமுகவே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories: