ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்

ஐதரபாத்: ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது. 145 இடங்களில் முன்னிலை பெற்று அசைக்க முடியாத முன்னிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உள்ளது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆளும் தெலுங்கு தேசம் கட்சி 29 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில், வேலூரில் மட்டும் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

மீதமுள்ள 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதே போல் 175 தொகுதிகள் கொண்ட ஆந்திர மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் ஜுன் 18-ம் தேதி முடிவடைந்தது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி செய்து வந்தது. ஆந்திர மாநிலத்தில், மக்களவை தேர்தலுடன் இணைந்து சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 11-ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.

இதில், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆளும் தெலுங்கு தேசம் கட்சி இம்முறை தோல்வி அடையும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்திருந்தது. எதிர்க்கட்சியான ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.

குப்பம் தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ண சந்திர மௌலியைவிட 67 வாக்குகள் குறைவாக பெற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பின்தங்கியுள்ளார்.

புலிவேந்துலா தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி 2 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் கூடுதலாக பெற்று தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளார்.

Related Stories: