ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை விவகாரம் மு.க.ஸ்டாலின் முதல்வராகி மனைத்தொழிலை காக்க வேண்டும்: பொன்குமார் வேண்டுகோள்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகி மனைத்தொழிலை காக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடன் தொல்லை போன்ற காரணங்களால் சென்னையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக மட்டுமல்ல. தமிழக ஆட்சியின் அவலத்தை படம் பிடித்தும் காட்டுகிறது.

சென்னை மதுரவாயல், வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் சின்னராஜா. மனைத்தொழில் செய்து நல்ல முறையில் பணம் சம்பாதித்தவர். கடந்த 6 ஆண்டுகால அ.தி.மு.க அரசின் தவறான நடவடிக்கை மற்றும் உத்தரவுகளால் மனைத்தொழில் முடங்கி போய்விட்டது. இதனால் பண நெருக்கடியும், கடன் தொல்லையும் ஏற்பட்டுள்ளது. மனம் உடைந்த சின்னராஜா வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தான் இறப்பதற்கு முன் மனைத்தொழில் முடங்குவதற்கு அ.தி.மு.க அரசுதான் காரணம் என்றும், இந்த ஆட்சி மாறி தி.மு.க அரசு அமைந்து மு.க.ஸ்டாலின்  இந்த தொழிலை காப்பாற்ற வேண்டும் என்றும் கோரியுள்ளார். இதை சின்னராஜா அழுதபடி வீடியோவில் பேசி  பதிவு செய்து அதனை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

தனது தற்கொலைக்கு இந்த அரசின் தவறான போக்கும், எல்லாவற்றுக்கும் லஞ்சம் என எல்லை மீறும் செயலுமே காரணமென பசு மரத்து ஆணி போல் வாக்குமூலம் பதிவு செய்துள்ளார். இதற்கு இ.பி.எஸ்.சும், ஓ.பி.எஸ்.சும் என்ன சொல்ல போகிறார்கள்? ஊழல், லஞ்சம் மூலம் பணம் சேர்ப்பது மட்டுமே தங்களின் ஒற்றை குறிக்கோள் என்பதை இதற்கு பிறகாவது தள்ளி வைத்துவிட்டு, கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் மீண்டும் பழைய நிலையை அடைந்திட உரிய நடவடிக்கைகளை எடுத்திட முன்வர வேண்டும். ஆனால், அது நடைபெறுமா என தெரியவில்லை. மறைந்த சின்னராஜா ஆசைப்படி தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைத்து  மு.க.ஸ்டாலின் முதல்வராகி இந்த பிரச்னைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பார்  என்பதே ஒட்டு மொத்த தமிழகத்தின் எதிர்பார்ப்பாகும். 

Related Stories: