கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான விதிகள் எம்ஜிஆர் திரைப்பட கல்லூரிக்கு பொருந்துமா?: தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக விதிகள் வகுத்து உயர் கல்வித்துறை பிறப்பித்த அரசாணை  டாக்டர் எம்ஜிஆர் அரசு திரைப்படக் கல்லூரிக்கு பொருந்துமா என்பது குறித்து தமிழக அரசு 4 வாரத்தில் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டுக்கான (2019-20) மாணவர் சேர்க்கை தொடர்பாக எம்ஜிஆர் அரசு திரைப்படக்கல்லூரி கொள்கை விளக்கக் குறிப்பேட்டை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக உயர் கல்வித்துறை பிறப்பித்துள்ள அரசாணையைப் பின்பற்றாமல் எம்ஜிஆர் அரசு திரைப்படக்கல்லூரி கொள்கை குறிப்பேட்டை வெளியிட்டுள்ளதாகக் கூறி சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஜான் அலெக்சாண்டர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த ஏப்ரல் 15ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்றும்,  இடஒதுக்கீட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்த அரசாணையை பின்பற்றாமல் நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்தும் வகையில் திரைப்படக்கல்லூரி வெளியிட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பேட்டுக்கு தடை விதிக்க வேண்டும். அதை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டீக்காராமன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக விதிகளை வகுத்து உயர் கல்வித்துறை பிறப்பித்துள்ள அரசாணை, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் அரசு திரைப்படக்கல்லூரிக்கு பொருந்துமா என்பது குறித்து 4 வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தது.

Related Stories: