ஜூன் 3ம் தேதி பள்ளி திறப்பு: கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பத்தாம், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நடந்தன. அதைத் தொடர்ந்து தேர்தல் காரணமாக கீழ் வகுப்புகளுக்கும் ஆண்டுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.

இந்நிலையில், தேர்தலுக்கு முன்னதாக ஏப்ரல் 13ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு, ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இதையடுத்து, ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்வது குறித்தும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அவர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

சுற்றறிக்கையில் பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளதாவது:

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் போது அரசு வழங்கும் இலவச பாடப்புத்தகம், மற்றும் இதர இலவச பொருட்கள் மாணவர்களுக்கு வழங்குவது தொடர்பாக ஏற்கெனவே அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 3,4,5 மற்றும் 8ம் வகுப்புகள், 2, 7, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் ஆகியவற்றில் படிக்கும் மாணவ மாணவியருக்கு புதிய பாடப்புத்தகங்கள், இலவச நோட்டுகள் அனைத்து பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இவற்றை மே 30ம் தேதிக்குள் வழங்க வேண்டும். இந்த இலவச பொருட்கள் பள்ளிகளுக்கு ஏற்ப போதிய அளவில் இருக்கிறதா என்பதை தலைமை ஆசிரியர்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இது தொடர்பான விவரங்களை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். மேலும், ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை அடுத்து முதல் நாளில் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பொருட்கள் வழங்கப்பட்டுவிட வேண்டும்.

Related Stories: