பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம்: சிபிஐ அலுவலகத்தில் நக்கீரன் கோபால் ஆஜர்

சென்னை: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக வீடியோ வெளியிட்ட வழக்கில் சிபிஐ அலுவலகத்தில் நக்கீரன் கோபால் இன்று ஆஜரானார். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்த செய்தி வெளியிட்டதற்கான ஆதாரங்களை இன்று நேரில் ஆஜராகி சமர்ப்பிக்குமாறு சிபிஐ நக்கீரன் கோபாலுக்கு சம்மன் அனுப்பியிருந்தது. பொள்ளாச்சியில் இளம் பெண்கள் மற்றும் மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஸ், உள்ளிட்ட 5 பேரை போலீசார்  கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 27ம் தேதி சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து டெல்லி மற்றும் சென்னையில் இருந்து வந்த சிபிஐ  அதிகாரிகள் பொள்ளாச்சியில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். இதுவரை சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையை அறிக்கையாக தாக்கல் செய்த நிலையில், சிபிஐ அதிகாரிகள் மீண்டும் முதலில் இருந்து விசாரணையை தொடங்கினர்.

முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சபரிராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பொள்ளாச்சி பாலியல் வன்முறை குறித்து வீடியோ ஆதாரங்களை வெளியிட்டது தொடர்பாக ஏற்கனவே  நக்கீரன் கோபாலிடம் சிபிசிஐடி போலீசார் நான்கு மணிநேரம் விசாரணை செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதையடுத்து மீண்டும் ஆஜராக நேற்று அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதில், இன்று காலை 11 மணிக்கு சென்னை ராஜாஜிபவன் சிபிஐ அலுவலகத்தில் நக்கீரன் கோபால் ஆஜராக வேண்டும் எனவும், மேலும் இந்த வழக்கு தொடர்பான வீடியோ ஆதாரங்களை சமர்பிக்குமாறும் குறிப்பிட்டிருந்தது. அதன் படி, இன்று நக்கீரன் கோபால் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: