மெரினா கடற்கரையில் விளையாடிய சிறுவன் ராட்டினத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்

சென்னை : சென்னை மெரினா கடற்கரையில் விளையாடி கொண்டிருந்த 8 வயது சிறுவன் அங்கிருந்த ராட்டினத்தில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெரினா கடற்கரையில் பானி பூரி கடை நடத்தி வரும் சென்னை நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த பத்மநாபன் என்பவரின் மகன் பிரணவ். கோடை விடுமுறை என்பதால் நேற்று மாலை தந்தையின் கடைக்கு பிரணவ் சென்று இருந்தான். அப்போது கடை அருகே ராட்டினம் விளையாடி கொண்டிருந்தவர்களை வேடிக்கை பார்க்க பிரணவ் சென்றுள்ளான்.

இதனை கவனித்த ராட்டின உரிமையாளர் பிரகாஷ், பிரணவை அருகில் வந்து பார்க்கும்படி கூறியிருந்தார். இதனால் உற்சாகம் அடைந்த சிறுவன் வரக்கூடிய விபரீதத்தை அறியாமல் ஆர்வத்தில் ராட்டினம் சுற்றி வரும் எல்லைக்குள் சென்றுள்ளான். இதனை கவனிக்காமல் ராட்டினத்தை இயக்கியதால்  எதிர்பாராத விதமாக ராட்டினத்தில் சிறுவன் சிக்கி கொண்டான்.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சிறுவனை காயங்களுடன் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பிரணவ் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தான். ராட்டினத்தை இயக்கியவர் போதையில் இருந்ததே சிறுவன் உயிரிழப்புக்கு காரணம் என்று சிறுவனின் தந்தை புகார் அளித்திருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக அண்ணா சதுக்கம் போலீசார் ராட்டின உரிமையாளரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: