காப்புரிமை பெறாதவர்கள் கும்பகோணம் ஐங்கரன் பெயரில் உணவகம் நடத்த ஐகோர்ட் தடை

சென்னை: கும்பகோணம் ஐங்கரன் காபி என்ற பெயரில் சென்னை, கும்பகோணம் உள்பட தமிழகத்தில் பல இடங்களில் டீ மற்றும் காபி ஸ்டால் மற்றும் உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தின் பங்குதாரரான ராமச்சந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கும்பகோணம் ஐங்கரன் காபி என்ற பெயரில் எங்களுக்கு சொந்தமாக 35 கடைகள் செயல்பட்டு வருகிறது. கும்பகோணம் ஐங்கரன் காபி என்பது எங்களது வர்த்தக முத்திரை ஆகும். காப்புரிமை சட்டத்தின் கீழ் இதற்காக உரிமம் பெற்றுள்ளோம். இதன்படி, கும்பகோணம் ஐங்கரன் என்ற பெயரில் வேறு யாரும் உணவகம் மற்றும் கடைகளை நடத்த முடியாது.  

ஆனால், கும்பகோணம் ஐங்கரன் காபி உணவகம் என்ற பெயரில் தஞ்சாவூர் கீழவாசல் மார்க்கெட் ரோட்டில் தமிழ்செல்வி மற்றும் குணசேகரன் ஆகியோர்  உணவகம் நடத்தி வருகின்றனர். இது எங்களது வர்த்தக உரிமைக்கு எதிரானதாகும். எனவே, அவர்கள் கும்பகோணம் ஐங்கரன் காபி உணவகம் என்ற பெயரில் உணவகம் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். வைத்தியநாதன், தஞ்சாவூர் கீழவாசல் மார்க்கெட் சாலையில் கும்பகோணம் ஐங்கரன் காபி உணவகம் என்ற பெயரில் உணவகம் நடத்த தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இதுதொடர்பாக அவர்கள் ஜூன் 16ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

Related Stories: