மேற்கு வங்கத்தில் வன்முறை நிகழ்ந்த பகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த கோரி மத்திய அமைச்சர்கள் மனு

டெல்லி : மேற்கு வங்கத்தில் வன்முறை நிகழ்ந்த பகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவின் போது, மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோர் மனு ஒன்றை அளித்தனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், மேற்கு வங்கத்தில் நடைபெற்ற 7 கட்ட மக்களவைத் தேர்தலின் போதும் வன்முறை நிகழ்ந்துள்ளது என்றும் எனவே வன்முறை நிகழ்ந்த பகுதிகளில் நியாயமான முறையில் தேர்தல் நடைபெற வேண்டும் என்று கூறினார்.

இதையடுத்து  பாஜக தொண்டர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் விரிவான மனுவை அளித்து இருப்பதாகவும் கோயல் குறிப்பிட்டார். மேலும் மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர்கள் மீது பதியப்பட்ட பொய்யான வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் பியூஷ் கோயல் தேர்தல் ஆணையத்திடம் வலியறுத்தினார். இதனிடையே மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகும் வன்முறை நிகழ வாய்ப்பு இருப்பதால் அங்கு தேர்தல் நடத்தை முடியும் வரை பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட வேண்டும் என்றும் பியூஸ் கோயல் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: